திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க


சித்தாந்த பண்டித பூஷணம
சிவஸ்ரீ ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள்


வரலாறுச் சுருக்கம்:-


சிவஸ்ரீ.தி.சங்கரபாண்டிய முதலியார்
துணைத் தலைவர்
சைவ சித்தாந்த சப


குரவன் முன்றுயில் கொள்ளுமா ணாக்கனை
யுரிய கோலின் உணர்த்துவன் ஈசனுந்
துரிய போகத் துயில்பெறு வான்றனை
யரிய சத்தியி னால்அறி விப்பனால்


(கிரண ஆகமம்-சதமணிமாலை)


தோற்றுவாய்:

    சிவஸ்ரீ.ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை அவர்கள் எங்கள் சபையை நிறுவிச் சிலகாலம் துணைத்தலைவராகவும், பின்னர் நிரந்திரத் தலைவராகவும் இருந்தவர்கள். இப்போது சைவவுலகம் அவர்களால் பெறும் உபகாரத்தை இழ்ந்துவிட்டது. தமிழ்ச் சைவவுலகம் அவர்களால் பெற்றன கணிசமான நூற்களஞ்சியம். நன்றியுள்ள சைவமாணவன் ஒருவனுக்கு அவர்கள் ஆக்கிய சாஸ்திர உரைகள் ஒப்புயர்வற்ற வரப்பிரசாதமாம். பிற உரைநடை நூல்களோ, ஐயமறுத்துத் தெளிவூட்டும் அமிர்தமன்னவை. அவர்கள் பணக்கவலையோ, மனக்கவலையோ இல்லாத ஒரு பிரபு வீட்டில் தோன்றவில்லை. அசாதாரணப் புலவர் தான் அவர்கள் தந்தையார். ஆயினும் நடுத்தரக் குடும்பங்களில் காணப்படும் கவலைகள், துன்பங்கள் யாவும் முழுக்கவுடையதே அவர்கள் குடும்பமும், ஆயினும் அவற்றிற்கிடையே அவர்கள் ஆற்றிய சமயசேவை அளப்பரிது. பலர் குடும்ப் நிலையைச் சொல்லிச் சமயசேவையில் வழுவி, நழுவி விடுவதைப் பார்க்கிறோம். ஆனால் ஆசிரியர் அவர்கள் நழுவவோ, வழுவவோ செய்யாது தம் கடமையை மிகச்செவ்வனே செய்ததை நினைத்துப் பார்க்கும் பொழுது எம்மனோரால் அதிசயிக்காமலிருக்க முடியவில்லை.


பிறப்பும் இளமையும்:

    திருநெல்வேலியைச் சார்ந்தது பேட்டை என்னும் திருமங்கை நகர். அங்கு வாழ்ந்தவர்கள் சிவஸ்ரீ த.ஆறுமுக நயினார் பிள்ளை அவர்கள். அவர்கள் அன்பு மனைவியார் ஈசுரவடிவு அம்மையார். இப்பெற்றோரின் சீமந்தப் புதல்வரே நமது ஆசிரியர் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள். ஸ்ரீ.த.ஆறுமுக நயினார் பிள்ளை அவர்கள் சிறந்த கவிஞர், நல்ல சொற்பொழிவாளர், சிறந்த ஆராய்ச்சியாளர். தமிழில் "நற்குடி வேளாளர் வரலாறு, சாலிய அந்தணர் என்ற மகாசைவர் புராணம், நிறையவை" போன்ற பல நூல்களை ஆக்கியுள்ளார்கள். இலங்கை சென்று "மெய்கண்டான்" என்ற பத்திரிக்கை ஆசிரியராய் இருந்தார்கள். குடும்பநிலை கருதித் திரும்பி விட்டார்கள். இவர்கள் முன்னோரில் சிலர் திருவாவடுதுறை யாதீனத்தில் சந்நியாசம் பெற்று முனிவராயிருந்து சிவப்பணி செய்துள்ளார்கள். இவ்வளவு தகமை பொருந்தியவர்க்கு நமது ஆசிரியர் அவர்கள் பேணி வளர்க்கப்பட்டார்கள். ஆயினும் தந்தையாரிடத்து தனித்ததொரு அச்சமும் அவர்களுக்கு இருந்தது. ஸ்ரீஆறுமுக நயினார் பிள்ளையவர்கள் முறையாக, குஸ்தி சிலம்பம் பயின்றவர்கள். எதிரிகளிடம் சொல்லாடுதலில் மட்டுமின்றி மல்லாடுதலிலும் வல்லவர்கள். ஆகலான் பேட்டையிலேயே ஸ்ரீஆறுமுகநயினார் பிள்ளை என்றால் அச்சங்கலந்த மரியாதை யாவரிடத்தும் தோன்றும். ஈசுரமூர்த்தி எனப் பெயரிட்டாலும் நமது ஆசிரியர் அவர்களை "ஐயாப்பிள்ளை" என்று அழைப்பது வழக்கமாம். தமது மகனார்க்கு ஆங்கிலம் பயிற்ற வேண்டும் சமஸ்கிருதம் படிப்பிக்க வேண்டும் என்ற ஆரா விருப்பம் தந்தையார்க்கு வைக்கப்பட்டது. நமது ஆசிரியர் அவர்களுக்கு ஆரம்பத்தில் சமஸ்கிருத அக்ஷராப்பியாசமும் பின்னர் தமிழ் அக்ஷராப்பியாசமும் செய்து வைக்கப்பட்டன. தந்தையாரே பல சந்தர்ப்பங்களில் தம் மகனார்க்கு ஆசிரியராய் இருந்து அறிவமுதூட்டி வந்தார்.
    உள்ளுர்ப் படிப்பு முடிந்து நெல்லை நகரில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பு தொடங்கியது. இப்பொழுதுள்ள சாப்டர் உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்தார்கள். பின்னர் கல்லூரிக் கல்வி சி.எம்.கல்லூரியிலும், ஹிந்துக் கல்லூரியிலும் நிகழ்ந்தன. எப்.ஏ.(இண்டர்மீடியட்) படிப்புடன் ஆசிரியர் அவர்கள் படிப்பு நிறைவெய்தியது.


சைவ சமயக் கல்வி:
   
    பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்த காலத்திலேயே இவர்கள் சைவ சமய சாஸ்திரங்களிலும், பிறகருவி நூல்களிலும் அழுந்திய உணர்வுடையவர்கள் ஆனார்கள். நமது ஆசிரியர் அவர்களது அத்தான் முறையினரும், புகழ் பெற்ற தமிழாசிரியரும், இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளித் தமிழ்ப் போதகாசிரியரும், பின்னாளில் திருவாவடுதுறை யாதீன வித்வானா யிருந்தவர்களுமாகிய ஸ்ரீமான் வி. சிதம்பர ராமலிங்க பிள்ளையவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுபோது போக்கினார். அப்பொழுதெல்லாம் ஸ்ரீ.வி.சிதம்பர ராமலிங்க பிள்ளையவர்கள் சைவ சித்தாந்த தேனமுதை நமது ஆசிரியர் அவர்களுக்கு அருத்தி வந்தார்கள். பல காலங்களில் இவர்கள் தம் ஆசிரியர் தங்கியிருந்த சிந்துபூந்துறையிலேயே தங்கி விடுவார்கள். பேட்டை செல்வதில்லை. இலக்கண, தருக்க, சைவசித்தாந்த சாத்திர பாடங்களை நமது ஆசிரியர் அவர்கள் தம் ஆசிரியர் ஸ்ரீ.வி.சிதம்பர ராமலிங்கபிள்ளையவர்களிடம் கற்றுக் கொண்டார்கள். நமது ஆசிரியர் அவர்கள் தமக்குச் சைவசித்தாந்தம் கற்பித்த ஆசிரியரை வணங்கி "சிவபரத்துவ நிச்சயம்" என்ற நூலில் பாடிய பாடல் வருமாறு:


விளங்கொளி வெள்ளி மலைமிசை யுமைதன்
னிடமுற வீற்றிருந் துயிர்க்குக்
களங்கம தொழித்துப் பரகதி யருளுங்
கண்ணுதற் பரமனே பரமென்
றுளங்கொள நாயேற் கொளிருநான் மறையி
னுறுதியை யுணர்த்தி வாழ்வளித்த
வளங்கொழு நெல்லைச் சிதம்பர ராம
லிங்கரின் மலரடி சரணே.

 

  ஸ்ரீ சிதம்பரராமலிங்க பிள்ளை அவர்கள் சொற்பொழிவு செய்யச் செல்லுமிடங்களுக்கெல்லாம் நமது ஆசிரியர் அவர்களும் உடன் செல்வார்கள். குறிப்பாக விக்கிரமசிங்கபுரத்தில் ஆண்டுதோறும் நிகழும் ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் குருபூஜை விழாவிக்கும், தூத்துக்குடியில் ஆண்டு தோறும் நிகழும் சைவ சித்தாந்த சபை ஆண்டு விழாவிற்கும் தவறாது உடன் செல்வார்கள்.


    மாணவப் பருவத்திலேயே பேட்டையில் திருஞானசம்பந்தர் திருவருட் கழகமொன்று நிறுவி அதனைச் செம்மையாக நடத்திப் பணி புரிந்தார்கள். ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதபண்டிதர் அவர்கள், மதுரை சிவஸ்ரீ ம. கல்யாண சுந்தரபட்டர் அவர்கள் போன்ற பண்டிதோத்தமர்கள் அங்கு வந்து உரையாற்றியுள்ளார்கள்.


தொழிலும் இல்வாழ்க்கையும்:

    ஆசிரியர் அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு பிற உத்தியோகங்களுக்குச் செல்லாது ஆசிரியர் பணியை மேற்கொள்ள விரும்பினார்கள். திருநெல்வேலி அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பயிற்சி பெற்றுத் தேறினார்கள். 1922-இல் நெல்லை மாவட்டத்து உடன்குடியில் முதல்முதலாக ஆசிரியர் பணியை மேற்கொண்டார்கள். அப்போதே சித்தாந்த சைவம் கற்கும் மாணவர்க்கு எளிதில் விளங்குமாறு சைவசாத்திரங்களுக்கு உரைகாண வேண்டுமென்ற அவாக்கொண்டார்கள். உடன்குடியிலிருந்து களக்காட்டிற்கு அழைக்கப்பட்டு பணிமேற்கொண்டார்கள். அப்பொழுது, நெல்லையில் வாழ்ந்த இவர்கள் ஆசிரியர் ஸ்ரீ வி.சிதம்பரராமலிங்க பிள்ளையவர்களைத் தமக்குச் சித்தியார் பாடம் சொல்லுமாறு கடையத்தைச்சார்ந்த வேளாளப் பிரபுக்கள் சிலர் அணுகினர்; வற்புறுத்தி வேண்டினார். ஸ்ரீசிதம்பரராமலிங்க பிள்ளையவர்களுக்கு நெல்லையைவிட்டு வர இயலாது போகவே தம்மாணவராகிய நமது ஆசிரியர் அவர்களுக்கு அக்கட்டளையைப் பிறப்பித்தார்கள். ஆசிரியர் அவர்கள் களக்காட்டில் தாம் மேற்கொண்டிருந்த ஆசிரியர் பணியின் நீங்கிக் கடையம் வந்து சத்திரம் கமிட்டி நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிமேற்கொண்டார்கள். அங்குள்ளோருக்கு சிவஞான சித்தியார் பாடமும் சொல்லிவந்தார்கள். இதற்குள் ஆசிரியர் அவர்களுக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்று வந்தது.


    சில பல காரணங்களால் தொடர்ந்து கடையத்தில் பணிமேற்கொள்ள முடியாத சூழ்நிலைகள் உருவாயின. ஆசிரியர் அவர்களும் அங்கிருந்து பலர் இருக்குமாறு வற்புறுத்தியும் விலகிக் கொண்டார்கள். உடன்குடி, களக்காடு, கடையம் ஆகிய ஊர்களில் சுமார் 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்கள்.

    ஆசிரியர் அவர்களுக்கு மீனாட்சி என்னும் பெண்ணின் நல்லாரைத் திருமணம் செய்துவைத்தார்கள். அதன் பின்னர் செங்கற்பட்டு மாவட்டம் சென்று 1926 ஆம் ஆண்டு முதல் அங்குள்ள பூவிருந்தவல்லி உயர்நிலைப்பள்ளியில் சில மாதங்களும், பொன்னேரி போர்டு உயர்நிலைப்பள்ளியில் 71/2 ஆண்டுகளுக்கு உத்திர மேரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியில் 14 ஆண்டுகளும் பணியாற்றினார்கள்.


நூற்பணியும், சிவப்பணியும்:


    செங்கற்பட்டு மாவட்டத்தில் இவர்கள் சிவப்பணி பல ஆற்றினார்கள். அங்கு வாழ்ந்தபொழுது தான் சமயத்துரையில் பிரபலமாயிருந்த சைவம், சிவநேசன், சமயஞானம், செந்தமிழ்ச்செல்வி, சிவாகமவித்யா, சைவசாஸ்திர பரிபாலனம், செந்தமிழ் போன்ற பல பத்திரிக்கைகளுக்குக் கட்டுரைகள் எழுதிவந்தார்கள். பல்வேறு நகரங்களில் - குறிப்பாக காஞ்சிபுரம், மதுரை, சேந்தமங்கலம், பூவாளூர், தூத்துக்குடி, நெல்லை, தருமபுரம், திருவாவடுதுறை போன்ற இடங்களில் நடைபெற்ற சைவ மாநாடுகள் பலவற்றிலும் இவர்களது சமயஞானம் மிக்க சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. 'சிவநேசன்' பத்திரிகையில் இவர்கள் இயற்றிய நூல்கள் பலவற்றை அநுபந்தமாகத் தனது பத்திரிகையில் வெளியிட்டது. உத்திரமேரூரில் இவர்கள் வாழ்ந்த பொழுது சிதம்பரம் என்ற திவ்யக்ஷத்திரத்தில் "சிவஞான சித்தியார்" பாடம் நடத்த அழைக்கப்பட்டார்கள். பல பெரியோர்கள் அழைப்பினை மீற மாட்டாது அங்கு மூன்று மாத காலம் சிவஞான சித்தியாரை நாள்தோறும் பாடம் சொன்னார்கள். ஸ்ரீ தண்டபாணிப் பிள்ளையவர்கள், ஸ்ரீ கஜபதி நாயக்கர் (Ex. M.L.C.) அவர்கள், ஸ்ரீ சகஜானந்தா (Ex.M.L.A.) அவர்கள் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க மாணவர்கள், நாற்பதின்மர்க்கு மேற்பட்டவர் பாடங் கேட்டனர். செங்கற்பட்டு மாவட்டத்தில் இவர்கள் ஆக்கி வெளியிட்ட நூல்கள் வெளியான வருடத்துடன் வருமாறு:-


1. திருவருட்பயன், கொடிக்கவி (பதவுரை, கருத்துரை) 1926
2. போற்றிப் பறொடை- வினா வெண்பா (பதவுரை, கருத்துரை) 1928
3. சமணர் கழுவேற்றம் 1929
4. இருபா இருபது (பதவுரை, கருத்துரைகள்) 1934
5. சுலோக பஞ்சக விஷயம் 1938
6. உண்மை நெறி விளக்கம் (புத்துரை) 1939
7. பொதுமொழி 1939
8. சிவபரத்துவ நிச்சயம் (செய்யுள்-பிரமாண சகிதம்) 1940
9. சுயமரியாதை யியக்கச் சூறாவளி 1946
10. மேரூர் முருகன் பதிற்றுப் பத்தந்தாதி (செய்யுள்) 1948
 

     உத்திரமேரூரில் வைத்து இவர்களது அருமை மனைவியார் எதிர்பாராதவிதமாய்த் தேகவியோகமடைந்தார்கள். அப்பொழுது தணிகாசலம் என்ற ஒரு புதல்வரும் ஐந்து புதல்விகளும் இருந்தனர். இம்மிகப் பெரிய குடும்பத்தை வைத்துக் கொண்டு இனி அயல் மாவட்டத்தில் இருக்க அவர்களுக்கு மனம்பற்றவில்லை. எனவே தம் சொந்த மாவட்டமாகிய திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாறுதல் வேண்டி விண்ணப்பித்தார்கள். அதன்படி 1948 இல் நமது ஆசிரியர் அவர்கள் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் போர்டு உயர்நிலைப்பள்ளிக்கு மாற்றப் பட்டார்கள்.


சங்கரன்கோவிலில் ஆசிரியர் அவர்கள் பணி:
   
    கோமதி அம்பாள் போர்டு உயர்நிலைப்பள்ளியில் பணிமேற்கொண்ட புதிதில் ஆசிரியர் அவர்கள் குடும்பம் ஆசிரியர் அவர்கள் ஜன்மஸ்தானமாகிய பேட்டையில் இருந்தது. சில மாதங்கள் கழிந்தபின் ஆசிரியர் அவர்கள் தம் குடும்பத்தைச் சங்கரன்கோவிலுக்குக் கொண்டு வந்தார்கள். இரண்டாண்டுகள் வரை அவர்கள் தம்மை இன்னார் என வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. சந்தனத்தையும், ஜவ்வாதையும் எவ்வளவு மூடிவைத்தாலும் அதன் மணம் வெளிப்படாது போமோ? மிக விரைவிலேயே தக்கோர் சிலர் இவர்களைக் கண்டுகொண்டார்கள். அதன் பயனாக ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி திருக்கோயில் வாசக சாலையில் வைத்து 8-3-1950 முதல் 3 மாத காலம் தொடர்ந்து சிவஞானசித்தியாரைப் பாடமாக இவர்கள் நடத்தினார்கள்.

    சிவஞானசித்தியார் பாடத்தை நடத்த முழுமுயற்சியை மேற்கொண்டவர்கள் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராயிருந்து ஓய்வு பெற்றுள்ள வித்துவான் ஸ்ரீ.அ.முத்துசாமி நாடார் அவர்கள். 1950 இல் ஸ்ரீ நாடார் அவர்களும் ஆசிரியர் அவர்களை அவர்கள் தங்கியிருந்த இரயில்வே பீடர் ரோடு இல்லம்வரை சென்று சேர்த்துவிட்டு வருவோம். அவர்களுக்கு மிகவும் அபிமானத்துடன் தொண்டு செய்த ஸ்ரீ ம.ஆ.ப. சங்கரநாராயண முதலியார் அவர்களை இங்குக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர்கள் குடும்பத்தார் யாவரும் ஆசிரியர் அவர்கள் குடும்பத்தினர்க்கு மிகவும் சிறந்த பணி செய்தார்கள். சித்தியார் பாடம் நிறைவெய்திய பின் நகரில் பலர் அவர்களிடம் பாடங்கேட்டு அவர்களை அறிந்துகொண்டமையால் ஆசிரியர் அவர்கள் ஆணையின் பேரில் 1952-இல் சித்தாந்த சபை தொடங்கினர். ஆசிரியர் அவர்கள் முழுக்கச் சபைப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இதற்கிடையில் 4.3.1953 இல் ஆசிரியர் அவர்கள் கோமதி அம்பாள் போர்டு உயர்நிலைப்பள்ளிலிருந்து ஒய்வு பெற்றார்கள். பின்னர் குடும்பநிலை கருதி ஆசிரியர் அவர்கள் மீண்டும் 1.7.1954 முதல் நகர இராமச்சந்திர வித்யாலத்தில் பணியாற்றத் தொடங்கினார்கள். 30.4.1958 இல் அங்கிருந்தும் அவர்கள் ஒய்வு பெற்றார்கள்.

    சபைப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. எப்பொழுதும் ஆசிரியர் அவர்களை மாணவர் குழு ஒன்று சுற்றியிருக்கும். பல வகையான சம்பாஷணைகளால் அம்மாணவர் கூட்டம் பயன்பெற்று வந்தது. 1955 முதல் ஆசிரியர் அவர்களிடம் மிக நெருங்கிப் பழகியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சபையின் துணைச் செயலாளராயிருந்த வித்துவான் ச. இரத்நவேலன் அவர்கள். ஆசிரியர் அவர்கள் உடனிருந்து ஆக்கிய நூற்கள் பலவற்றைப் பிரதிசெய்து ஆசிரியர் அவர்கள் அந்திம காலம்வரை பல பணிவிடைகள் செய்தும் ஆசிரியர் அவர்கள் நல்லாசியைப் பெற்ற நன் மாணவர் இவர். ஆசிரியர் அவர்களிடம் சித்தாந்த பாடம் கேட்டுப் பயன்பெற்ற நன் மாணவர் சபையின் துணைத்தலைவராயிருந்த ஸ்ரீ.மா.பட்டமுத்து, M.Sc., B.T. அவர்கள். இவ்விருவரும் ஆசிரியர் அவர்கள் வெளியிட்ட "சமயசாதனம்" என்னும் மாத சஞ்சிகையில் பல சித்தாந்த சைவக் கட்டுரைகள் எழுதியுள்ளார். சங்கரன்கோவிலில் ஆசிரியர் அவர்களை நன்கு ஆதரித்துப் பேணிய சைவசீலர் சபையின் முன்னாள் தலைவர் ஸ்ரீ N.K.S. இராஜகோபால் அவர்கள். ஸ்ரீ N.K.S. இராஜகோபால் முதலியார் அவர்கள் என் தூண்டுதலின் பேரில் அச்சிட்டு வெளிப்படுத்தினார்கள். தமது பொருளுதவியால் பதினான்கு சித்தாந்த சாத்திரங்களையும் சபையில் பலர்க்கு ஆசிரியர் அவர்களைக் கொண்டு பாடமாகச் சொல்லுவித்தார்கள். சபையின் முன்னாள் பொருளாளரான ஸ்ரீ.ந.முருகையா முதலியார் அவர்களும் ஆசிரியர் அவர்களைக் குருமூர்த்தியாகக் கொண்டு பேணினார்கள். ஆசிரியர் அவர்கள் இரு நூற்கள் சபைப் பொருளாளர் பொருளுதவியால் வெளிவந்தவை. சபையின் சார்பில் வெளிவந்த ஆசிரியர் நூல்கள் வருமாறு:
 

1. சைவாலயங்களில் சமஸ்கிருத மந்திரங்களே வேண்டும். 1954
2. அம்பலவாணரின் ஆனந்த நடனம். 1955
3. சைவ வைணவப் பாவைகள் (ஆராய்ச்சி) 1963
4. சங்கரநயினார்கோவில். 1965
5. அந்தம் ஆதி. 1968
6. கற்பு என்னும் திண்மை. 1970
7. சிவ சிவா 1971
8. நாடும் நவீனரும் (2-ஆம் பதிப்பு) 1971
9. சங்கற்ப நிராகரணம் 1988

"கோமதி சதரந்த மாலை" என்னும் செய்யுள் நூலை ஆசிரியர் அவர்களிடம் சித்தியார் பாடங்கேட்ட ஸ்ரீ P. சதாசிவசுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தம் மனைவியார் நினைவாக அச்சிட்டு வெளிப்படுத்தினார்கள். ஸ்ரீ P. சதாசிவ சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் நமது ஆசிரியர் அவர்களுடன் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணியாற்றியவர்கள். சிறந்த தர்ம சிந்தனையாளர். ஆசிரியர் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார்க்கும் பலவகையான உதவிகள் புரிந்து பேணியவர்கள்.


திருநெல்வேலியில் ஆசிரியர் அவர்கள் பணி:

    1957-ஆம் ஆண்டு ஆவணி விநாயகர் சதுர்த்தி முதல் ஆசிரியர் அவர்கள் பணி நெல்லையில் தொடங்கியது. அங்குச் சித்தாந்த சைவச் செந்நெறிக் கழகம் ஒன்று நிறுவி அதன் சார்பில் ஆசிரியர் அவர்களிடம் சித்தாந்த பாடம் பல்லோர் கேட்டனர். 1957 ஆவணி விநாயக சதுர்த்தியில் "சிவஞான சித்தியார்" பாடம் ஆறுமுக நயினார் சந்நிதியில் வைத்து நடைபெற்றது. ஏறத்தாழ அதன்பின்னர் பத்தாண்டு காலம் நமது ஆசிரியர் அவர்கள் சித்தாந்த சாத்திரங்கள் அனைத்தையும் பாடம் சொன்னார்கள். அக்கழகத்தார் ஆசிரியர் அவர்கள் ஆக்கிய நூற்கள் பலவற்றை நெல்லை நகரப் பிரமுகர்கள் பலர் பொருள் உதவியால் அச்சிட்டு வெளிப்படுத்தினார்கள். அவை வருமாறு:
 

1. சைவ சமயிகளுக்கு ஓர் நல்லுரை 1957
2. குருபூஜை 1958
3. நான் 1958
4. கொடிக்கவி - விளக்கவுரையுடன் 1958
5. திருக்குறள் பொதுநூலா? 1959
6. சிவராத்திரி - நவராத்திரி, ஏகாதசி விரதங்கள் 1959
7. உண்மை விளக்கம் - புத்துரை 1960
8. நம: பார்வதீ பதயே 1960
9. நாடும் நவீனரும் 1960
10. உண்மை நெறி விளக்கம் - விளக்கவுரையுடன் 1961
11. திருக்கலியாணம் 1961
12 சிவாலயங்களும் சைவசமயமும் 1927


     பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பாடம் சொன்னதோடல்லாமல் "சமய சாதனம்" என்ற மாதப் பத்திரிக்கையில் ஆசிரியர் பணியும் செய்தார்கள். 1963 ஆகஸ்ட் முதல் சில ஆண்டுகள் அப்பத்திரிகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. சில பொருளாதாரக் காரணங்களால் பத்திரிகை நின்று விட்டாலும் அதன் பணிகள் சமயப் பத்திரிகை உலகில் பல அரிய மாறுதல்களைச் செய்தது.

    ஆசிரியர் அவர்கள் ஆற்றிய சமயப் பணிகளுக்கு ஆசி வழங்கிய பெருந்தகை ஆசாரிய மூர்த்திகள் ஸ்ரீலஸ்ரீ ஈசான சிவாச்சாரியார் சுவாமிகள் அவர்கள். அவர்கள் சிவபதம் எய்துவதற்குச் சின்னாள் முன்னர் ஸ்ரீலஸ்ரீ சிவாச்சாரிய சுவாமிகள் தமது திருக்கரத்தால் நமது ஆசிரியர் அவர்கள் சிரசில் திருக்கரம் வைத்து நல்லாசி வழங்கினார்கள். அதனை ஆசிரியர் அவர்கள் தாம் இயற்றிய கீழ்க்கண்ட பாடல் வாயிலாய் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
 

"மாசான சேவகரை மதியாதாய்
மலத்திரய வலியை வென்றா
யீசாந குருநாதா இறைகழனீ
யெய்துதற்கீ ரிரண்டு நாண்முன்
தேசாருன் திருக்கரமென் சென்னிமிசை
சேர்த்தாசி சிறக்கச் செய்தா
யாசார மதனைநினைந் தனவரத
முனைத்துதித்த லடியேற் காமே."


    திருவாவடுதுறையாதீனத்து இருபத்திரண்டாவது குரு மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக மூர்த்திகள் 30.5.1968 அன்று கல்லிடைக்குறிச்சிக்கு வரவழைத்து ஆதீன வித்துவானாக நியமித்து மாத ஊதியமும் தந்தார்கள். அப்பொழுது ஆசிரியர் அவர்கள் ஆக்கிய -
"அத்வைதம்"-என்ற நூல் 29.9.1969 அன்று ஆதீன வெளியீடாக வந்தது.

 


    இடைவிடாத சமயப் பணிகளாலும் குடும்பக் கவலையாலும் ஆசிரியர் அவர்கள் உடல் நலிவுற்றது. இருப்பினும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சுடன் தம்மகளாருடன் தென்காசியில் வாழ்ந்துவந்தார்கள். ஆசிரியர் அவர்கள் தம், உடல் பொருள் ஆவி அனைத்தையும் மெய்கண்ட தேவர் திருப்பணிக்கே ஆளாக்கியவர்கள். எனவே 19.10.1971 இல் ஸ்ரீமெய்கண்ட சுவாமிகள் குருபூஜையையொட்டி தென்காசியில் தம்மகள் இல்லத்தில் வைத்துச் சிவபதம் எய்தினார்கள். சிவபிரான் தனது கருணைப் பிரவாகம் ஒன்றைத் தன்னுள் ஒடுக்கிக் கொண்டான். ஒராயிரம் ஆண்டு தவம் செய்தாலும் வாராத மாமணி போன்ற நமது ஆசிரியர் அவர்களை சைவவுலகம் இழந்துவிட்டது. ஒரு பேரியக்கம் போல பணியாற்றிய அவர்கள் இன்று நம்மிடை இல்லை.


ஆசிரியர் அவர்களின் சிறந்த ஞாபகச் சின்னமாக நாங்கள் பேணிவருவது நமது சைவ சித்தாந்த சபையைத்தான். சங்கரன்கோவில் சைவ சித்தாந்த சபையை ஆசிரியர் அவர்கள் தம் புதல்வன் போல எண்ணினார்கள். எனவே அவர்கள் வழிநின்று சபை தனது பணியைச் செவ்வனே செய்யும்.
 

                 பெண்ணினல்லார் - மீனாட்சி ஈஸ்வரமூர்த்திப் பிள்ளை

  நம: பார்வதீ பதயே. ஹர ஹர மஹாதேவா.
 


Sign Guestbook       View Guestbook


THIS PAGE IS TYPED USING Tsc_Paranar TAMIL FONT.  IF YOU DO NOT VIEW THIS PAGE CORRECTLY DOWNLOAD THIS  ZIP FILE  AND UNZIP IT  AND INSTALL THE FONT
                                                
                                                                                                                               


VISIT Samaya Saathanam