உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

ஆண்டவன் கட்டளை

சைவ சரபம் மா.பட்டமுத்து

   ஆண்டவன் யார்? நம்மை ஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன் சிவபிரானே.  அவன் நம்மை உடையவன், "நன்றுடையான், தீயதிலான், நரைவெள்ளேறு ஒன்று உடையவன், உமையொருபாகமுடையான், சென்றடையாத திருவுடையான், சிராப் பள்ளிக்குன்றுடையான்" அப்பெருமானாரின் அருட்கட்டளையே நம்மை ஆட்டுவிக்கிறது; ஆன்மாவைப் பற்றியுள்ள ஆணவத்தின் வலியைக் குறைக்கிறது.  பரமானந்தம் பருக வைக்கிறது. சிவானந்தப் பேறு எப்படி அடைவது?  சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கத்தைச் சிவனென வழிபடுக; அல்லது குருவே சிவனென வழிபடுக; அல்லது சிவனடியாரையே சிவனென வழிபடுக.  இதுவே ஆண்டவன் கட்டளை என்க.

 

    இக்கட்டளையைச் சிரமேல் கொண்டு அருள்வாழ்வு நடாத்தியவர்கள் யார்? அறுபான் மும்மை நாயன்மார்களும், தொகையடியார்களுமே அவர்கள்.  அவர்கள் அருள் வாழ்க்கையின் நம்போன்றோர் உய்தி கூட எடுத்துக்காட்ட ஆண்டவன் கட்டளையால் நமது உலகிற்கு வந்தருளியவர் தாம் நமது ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள்

 

"வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருளாகிய வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும், அள்ளு நீறும் எடுத்து அனைவானாகிய" ஆலாலசுந்தரரை அருட்கயிலையிலிருந்து பூவுலகிற்கு அனுப்பியது ஆண்டவன் கட்டளை.  எதற்காக? "மாதவம் செய்த தெந்திசை வாழ்ந்திடத் தீதிலாத்திருத்தொண்டத் தொகை தர" ஆண்டவன் கட்டளை நம்பியாரூரரை நமக்குத்தந்தது.

    திருத்தொண்டத்தொகை எடுத்துரைக்கும் "ஈர அன்பினர்" அருள்வாழ்வுச் சரிதைகளை வகுத்துக் காட்ட ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகளின் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் அருள்நூலை நமக்குத் தந்தருளியது எது?  ஸ்ரீ பொல்லாப் பிள்ளையாரின் அருட்கட்டளை அல்லவா?

    இந்த இரு அருட்கருவூலங்களை அடிப்படையாகக் கொண்டு "மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற பொங்கிய இருளை ஏனைப் புற இருள்போக்குகின்ற செங் கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம்" என்னும் ஈடிணையற்ற ஞானக் கருவூலத்தைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் நல்கியருளுமாறு செய்தது எது?  "உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுத்த ஆண்டவன் கட்டளை அன்றோ?

    நாயன்மார்களின் செயற்கரும் செய்கைகள் எல்லாம் ஆண்டவன் கட்டளையால் நிகழ்ந்தனவே.  மனுநீதிச்சோழ மன்னர் தமது ஒரே மைந்தனைத் "தேராழியூற வூர்ந்தமை" எங்ஙனம்? ஓலைக்காட்டி அடிமை எனத் தடுத்தாண்டு கொண்டு வன்தொண்டர் "பித்தா பிறைசூடி எனப் பெரிதாம் திருப்பதிகம்" அருளிச் செய்யத் தூண்டியது எது? -

 

"எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்" தந்த திருவோடு மறையுமாறு செய்து திருநீலகண்ட நாயனாரையும் அவர்தம் திருமனைவியாரையும் என்றும் இளமையாக்கியது எது?

நடுநிசியில் கொட்டும் மழையில் நனைந்து நீரில் மிதந்த நெல்லினை வாரிக் கொணர்ந்து பதமாக்கி அரிசியாக்கித் திருவமுதாக்கி "குழிநிரம்பாத புன்செய்க் குறும்பயிரர்" அறுவகைக் கறியமுதாக்கி "உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை" அமுது செய்விக்க இளையான்குடி மாற நாயனாரைத் தூண்டியது எது?

 "இன்புறு தாரம் தன்னை யீசனுக்கு அன்பர் என்றே துன்புறாது உதவும் தொண்டராம் இயற்பகை நாயனார் பெருமையை நம்போன்றார்க்கு உணர்த்துவது எது?

"இன்னுயிர் செருக்கக் கண்டும் எம்பிரான் அன்பர் என்றே" "தத்தா நமர்" என்று தடுக்க மெய்ப்பொருள் நாயனாரை உந்தியது யாது!

    "மைதழையும் கண்டத்து மலைமருந்தை வழிபாடு செய்து வரும் தவமுடைய முனிவர் சிவகோசரியாருக்குக் காட்டும் பொருட்டுக் குடுமித்தேவரின் குருதிபாயும் கண்ணில் தமது ஒரு கண்ணை இடந்து அப்ப உணர்த்தியதும், பிறிதொரு கண்ணில் வரும் குருதிப் பெருக்கினைக் கண்டுத் தமது மற்ற நயனத்தினைத் தோண்டும் போது "நில்லு கண்ணப்ப! நில்லுகண்ணப்ப! எம் அன்புடைத்தோன்றல் நில்லு கண்ணப்ப" எனத் திருக்கரத்தால் தடுத்து நிறுத்தியருளியதும் யாது? இவற்றை அருளிச் செய்தது ஆண்டவன் கட்டளையன்றோ!

    வடமொழி வேதங்கள் எல்லாம் சைபர் கணவாய் ஆரியர்களின் கைவரிசையே, அவையெல்லாம் சிவவாக்கு அல்ல என்று வடமொழித் துவேசம் கொண்ட தமிழ்வெறி கொண்ட நவீனர்களின் மரபு மீறிய கொடுமையை உடைத்தெறிய "அருமறை வாய்மைத் துலங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்" ஆகிய உருத்திரபசுபதியாரை நமது சைவ உலகிற்கு அறிமுகப்படுத்தியதும், யஜுர் வேத இருதயத்தில் திகழும் ஸ்ரீருத்திரமாகிய "அருமறைப் பயனைப்" பகலும் எவ்வியும் வழுவாமே கழுத்தளவு நீரில் நின்று பயின்று பரசிவப்பிரபுவின் திருவடிப் பேற்றினை அப்பெருந்தகையார் அடைந்துய்யுமாறு செய்தருளியதும் ஆண்டவன் கட்டளை அன்றோ!

    "வேதநெறி தழைத்தோங்க, மகுசைவத்துறை விளங்க பூதபரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத" ஆளுடைய பிள்ளையாரால் சமண இருளையும், புத்த மருளையும் அகற்றி சைவப் பிரகாசம் பெருக அருள் பாலித்தது ஆண்டவன் கட்டளை அல்லவா? 

 தேமாலைச் செந்தமிழின் செழும் திருத்தாண்டகம் பாடி"நாமார்க்கும் குடியல்லோம்" என்ற பொன்மொழியை வழங்கி "திருநின்ற செம்மையே செம்மையாக கொண்ட" ஆளுடைய அரசினை ஆட்கொண்டது ஆண்டவன் கட்டளை தானே!

    "அண்ணன் அருளால் அருளும் சிவாகமம்" வடமொழியில் அல்லவா உளது? தமிழ் கூறும் நல்லுலகம் அதனை அறிந்து ஆன்ம லாபம் பெற வேண்டுமே! அதற்காகவே மூலன் உடலில் பரகாயம் செய்து திருமூலராகிய அப்பிரபு

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே"
என்று ஆண்டவன் கட்டளையை அற்புதமாகச் சித்தரிப்பது காண்க.

"பண்பால் யாழ்பயில் பாணப்பத்திரன்
தன்போல் என்பால் அன்பன்
தன்பால் காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வர விருப்பதுவே"

என்று சேரமான் பெருமாள் நாயனார்க்கு ஆண்டவன் விடும் கட்டளையினைக் காண்க.

"பெற்றான் சாம்பாற்குப் பேதமறத்தீக்கை செய்து
முத்தி கொடுக்க முறை"
என்று "அடியார்க்கு எளியான் தில்லைச் சிற்றம்பலவன் "கொற்றவன்குடி ஸ்ரீ உமாபதி சிவாசாரியார்க்கு ஆணையிட, பெற்றான் சாம்பாற்கும், முள்ளிச் செடிக்கும் முத்தி கொடுத்தமை சைவ உலகம் அறியாததா? கொடிக்கவி என்னும் சாத்திர நூலினைப் பாடி அப்பெருந்தகையார் தில்லையில் கொடியேற்றியது ஆண்டவன் கட்டளையால் தானே!

    சேந்தனார் "திருப்பல்லாண்டு" என்னும் அற்புதப் பனுவல் பாடித் தில்லையில் தேர் ஓடச் செய்த அருள்ப்பாடு எதனால் நிகழ்ந்தது? அம்பலவன் ஆணையால் அன்றோ!

    "ஈராண்டில் சிவஞானம் பெற்றுயர்ந்த மெய்கண்ட தேவர் அருளிச் செய்த சிவஞானபோத ஞானக் கருவூலத்திற்கு ஈடினையற்ற மகாபாஷ்யம் வழங்கியருளுமாறுப் பேரூர் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக மூர்த்திகளின் பிரதம சீடராகிய ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளுக்குக் கட்டளையிட்டது திருவொற்றியூர்ப் பிரான் அல்லவா?

    "அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப அனைத்துயிர்களின் எண்ணம், வாக்கு, செயல்பாடு எல்லாமே ஆண்டவன் கட்டளையாற்றான் நிகழ்கின்றன.  இவ்வுண்மையினை ஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள்

"ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
    அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே
    உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே"

என்னும் திருப்பாடலால் எடுத்துரைப்பதைக் காண்க.

Click this to download the pdf version of this Essay

 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெ ல்லாம"

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.