உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

"அருள்மேனி"
 

- சைவ சரபம் மா.பட்டமுத்து

   

    அநாதிமுத்த சித்துருவாகிய சிவபிரான், விகாரப்படுதற்குக் காரணமாகிய பரதந்திரம், ஏகதேசத்திற்குக் காரணமாகிய சிற்றுணர்வு, சிறு செயல்கள், துடக்குறுதற்குக் காரணமாகிய விருப்பு, வெறுப்புகள் ஆகியவை தன்பால் இல்லாமையால் தானினைந்த திருமேனியைக் கொண்டருள்வான். சிவபிரானது திருவுருவம் உலகினைக் கடந்து நிற்கிறது. அத்திருவுருவில் உலகம் தோன்றியொடுங்கும். அது உலகுக்குயிருமாயும், உலகமேயாயும் நிற்கிறது. இதனாலன்றோ, விச்சுவாதிகள், விச்சுவகாரணன், விச்சுவாந்தரியாமி, விச்சுவரூபி என்று கூறி வேதங்கள் சிவநாதனைத் துதிக்கின்றனர்! அத்திருமேனி மலநீங்கிய உயிர்க்கு வியாபக அறிவைச் செய்யும் சத்தியுருவமேயன்றி, ஏகதேச அறிவைச் செய்யும் மாயை யுருவமல்ல, உயிர்களின் உய்திக்காக உமாநாதன் மேற்கொள்ளும் அருள் வடிவின் சிறப்பினை ஸ்ரீசிவஞான சித்தியார் விரிவுபட விளக்குகிறது. அவ்வடிவினால் ஆன்மாக்கள் பெறும் எண்ணிறந்த பயன்களிற் சிலவற்றை ஈண்டுச் சிந்திப்பாம்.

    விஞ்ஞான கலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை உயிர்வர்க்கங்களில், விஞ்ஞானகலருக்கு உள் நின்று உணர்த்தியும், பிரளயாகலருக்குச் சதாசிவ மூர்த்தமாய் நின்றும், சகலருக்கு ஆசான் மூர்த்தியை அதிட்டித்து நின்றும் சிவபிரான் தீக்ஷயருளிமுப்பொருள்களின் இயல்புணர்த்துகிறார்.

    வேத, சிவாகமங்களைக் கோவைப்படச் செய்தற் பொருட்டும், தேவர், நரர், நாகர் முதலியோர்குக் குரு பரம்பரையினை அருளிச் செய்தற் பொருட்டும் அருள் வடிவம் கொள்கிறார்.    போக வடிவங் கொண்டு உயிர்களுக்குப் போகம் புரிகிறார். கோர வடிவங் கொண்டு உயிர்களின் வினைகளை வீட்டுகிறார். யோக வடிவங் கொண்டு யோக முத்தி உதவுகிறார். இவை யாவும் உயிர்கள் மாட்டு உமையொரு பாகனார் வைத்த பேரருளினாலே யாமென்க.

    இனி, சிவபிரான் ஆன்மாக்களின் பொருட்டு படைப்பு, திதி, சங்காரம், மறைப்பு, அருளல் என்னும் ஐந்து அருட் செயலாற்றுகிறார். இவை யாற்றுதற்கும் திருமேனி கொள்கிறார். தாவர, சங்கமங்கள் தமது ஒவ்வொரு றுப்புகளினின்று தோன்றுமாறு படைப்புக் காலத்தில் திருமேனி கொண்டருள்கிறார், தோன்றின முறையே அவையாவும் ஒடுங்குதற்குச் சங்கார காலத்தில் அருள் வடிவம் மேற்கொள்கிறார். திதியின் பொருட்டு மலைமங்கை பாகனாராகத் திகழ்கிறார். மறைப்புக்கு ஊன நடனமியற்றும் திருமேனி கொள்கிறார். அனுக்கிரகத்திற்கு யோக வடிவங் கொண்டு உயிர்கள் மாட்டுப் பேரருள் சுரக்கிறார்.

    இங்ஙனம், நமது கருமேனியைக் கழிக்கப் பிஞ்ஞகனார் மேற்கொள்ளும் பேரருள் வடிவங்களை உளத்தாலும், சிரத்தாலும், ஓதிடும் நாவாலும் வழுத்திப் பிறப்பின் பயனைப் பெறுவோமாக.


 

Click this to download the pdf version of this Essay
 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.


இந்தக் கட்டுரை சமய சாதனம் மலர் 1 இதழ் 6 (1 January 1964) இல் வெளியிடப்ப்டடது.