உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

"அருட் செயல்"

- சைவ சரபம் மா.பட்டமுத்து

       ஆணவ மலத்தால் தமது அறிவு, இச்சை, செயல் மறைக்கப்பட்டு உயிர்கள் நிற்கும் நிலை கேவலம், சிவபிரான் நல்கும் தனு, கரண, புவன, போகங்களோடு கூடிப்பிறப்பு, இறப்புட்பட்டு, இருவினைகளை உயிர்கள் நுகர்ந்து நிற்கும் நிலை சகலம். மலங்கள் நீங்கியவழிச் சிவத்தோடு கூடி உயிர்கள் மகிழும் நிலை சுத்தம், கேவலத்தில் ஒரு செயலுமின்றிக் கிடந்த உயிர், சிவபிரானின் அருளால் சகலத்தில் பத்துக் காரியங்களை மேற்கொள்கிறது. சுத்தத்தில் அப்பத்தும் நீங்கப் பெற்று, திருவருளைக் கூடுகிறது. அப்பத்துச் செயல்கள் யாவை?

    ஸ்ரீ சிவஞான சித்தியார் நான்காம் சூத்திரம் மூன்றாம் அதிகரணத்து வரும் 38, 39, 40 ஆகிய திவ்ய பாசுரங்கள் அப்பத்தினையும் விவரித்துப் பேசுகின்றன.

    கேவலத்தில் அப்பத்துச் செயல்களும் ஆன்மாவிடம் முன்னில்லாதிருந்தன. அந்நிலையில் ஆன்மா ஆணவ மலத்தோடு மாத்திரையே கூடி நிற்பன். 1 உடம்பு இல்லாதவன் (அமூர்த்தன்); 2 கலை முதலிய போக காண்டத்துச் சேர்விலன (கலாதியோடும் சேர்விலன்); 3 தருமம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதருமம், அஞ்ஞானம், அவைராக்கியம், அனைசுவரியம் ஆகிய போக்கிய காண்டங்களைப் பொருந்தாதவன் (அராகாதி குணங்களோடும் செறிவிலன்); 4 இச்சை முன்னில்லாதவன் (குறியிலன்); 5 அறிவு முன்னில்லாதவன் (அறிவிலன்); 6 ஒரு தொழிலும் முன்னில்லாதவன் (செயல்கள் இல்லான்); 7 சத்தம் முதலிய விடயங்களை விரும்பும் சுதந்திரம் முன்னில்லாதவன் (கருத்தாவல்லன்); 8 போகத்தில் முன் கொள்கை யில்லான் (போகத்திற் கொள்கை யில்லான்); 9 தோற்றக்கேடுகள் முன்னில்லாதவன் (நித்தன்); 10 ஏகதேசியாந் தன்மை முன்னில்லாதவன (வியாபி)

    இனி, கேவலத்தில் ஆன்மாவினிடம் முன்னில்லாதிருந்த அப்பத்துச் செயல்களும் ஆன்மாவைச் சகலத்தில் வந்தடைகின்றன. சகலத்தில் ஆன்மா, சிவபிரான் அருளால் 1 உடம்பினைக் கொள்கிறது (உருவினைக் கொண்டு); 2 போக காண்டத்தோடு கூடுகிறது [போக(த்து மருவி)]; 3 போக்கியகாண்டமாகிய புத்தியாதியைச் செறிகிறது [போக்கியத்து (மருவி)]; 4 இச்சை யுறுகிறது [உன்னல் (மருவி)]; 5 வாக்குக்களானிகழும் அறிவினை அடைகிறது [செப்பல்(மருவி)]; 6 செயல்களை மேற் கொள்கிறது [வரு செயல் மருவி]; 7 சத்தம் முதலிய விடயங்களை விரும்பும் சுதந்திரம் அடைகிறது [சத்தம் ஆதியாம் விடயந் தன்னில் புரிவதுஞ் செய்து]; 8 அவ்விடயங்களை நுகர்கிறது [(நுகர்வதும் செய்து)]; 9 பிறப் பிறப்பினைப் பெற்று உழல்கிறது [இங்கு எல்லா யோனியும் புக்குழன்று]; 10 ஏகதேசியாய் நிற்கிறது [சென்று திரிதரும்].

    இனி, அப்பத்துச் செயல்களும் சிவபிரானருளால் சுத்த நிலையில் ஆன்மாவினிடமிருந்து அகலுமாற்றைக்காண்பாம். (குருவருள்பெற்று) 1 குருவின்பால் தன்னுடலை உயிர் தானஞ் செய்வதால் உடம்பு நீங்கும்; (ஈசன்றன் சக்தி தோய) 2 போக, 3 போக்கியத்துக் கருவிகளின் செறிவு நீங்கும்; (ஞானம்பெருகி) பாச 5 அறிவு 4 இச்சை, 6 செயல்கள் கழியும்; (இருவினைச் செயல்கள் ஒப்பின்) 7 சத்தமாதி விடயங்களை விரும்பும் சுதந்திரம் நீங்கும்; (பண்டைச் சிற்றறிவு ஒழிந்து) 8 அவ்விடயங்களை நுகருஞ்செயல் நீங்கும்; (ஞான யோகத்தைக்குறுகி) 9 எல்ல யோனியும் புக்குழலுதலாகிய தன்மையை உயிர் நீங்கப்பெறும்; 10 மும்மல நீக்கத்தால் (முன்னைத்திரி மலமறுத்து) உயிர் ஏகதேசத் தன்மையிலிருந்து விடுபடுகிறது.

    இங்ஙனம் கேவலத்தில் முன்னில்லாதிருந்த அப்பத்துச் செயல்களையும் சிவபிரான் அருளால் சகலத்தில் ஆன்மாப் பெறுகிறது. சுத்தத்தில் அவனருளால் அவைநீங்க. ஆன்மா அவனருளோடு கூடிப் பேரின்பம் எய்துகிறது. சிவபிரான் நம் பொருட்டுச் செய்யும் இத் திருவருட் செயலை எக்கணமும் மறவாது தொழுது ஏத்தி மகிழ்வோமாக.


    

Click this to download the pdf version of this Essay
 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.


இந்தக் கட்டுரை சமய சாதனம் மலர் 1 இதழ் 9 (1 April 1964) இல் வெளியிடப்ப்டடது.