உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

இது அறமா?
 

- சைவ சரபம் மா.பட்டமுத்து

       பின்பற்றுதல் (Imitation) என்ற இயல்பூக்கம் (Instinct) மனித வாழ்வு முழுவதும் காணப்படும் ஒரு தன்மையாம் நமது வாழ்வில் நாம் மேற்கொள்ளும் இயக்கங்களிற் பிறரைப் பின்பற்றி எழும் செயல்களே பெரும்பான்மையன. உலக அறிவும், ஆற்றலும் வளர்ச்சியுறாத குழந்தைப் பருவத்தில் இந்த இயல்பூக்கத்தின் செயற்பாடு மிகுதியாக மிளிரும். இதனால் நன்மையான விளைவுகளும் ஏற்படலாம்; தீமையான விளைவுகள் வருவதற்கும் தடையில்லை. சைவ சமய சாஸ்திர ஞானமும், ஆசாரிய பக்தியும் இல்லாத இன்றைய சைவர்களிடம் இவ்வியல்பூக்கத்தின் தொழிற்பாடு பெரிதும்காணப்படுகிறது. சித்தாந்த சைவத்தின் சிறப்பினை உணரும் விழைவில்லாது, மேனாட்டுச் சமயங்களே மேன்மையானவை எனக் கருதி, அச்சமயங்களின் மரபுகளைப் பின்பற்றி அவற்றைச் சைவ சமய பழக்க வழக்கங்களிற் கலவடஞ் செய்கின்ற சைவர்களின் தொகை கணக்கிடற்கரிது.

    மேனாட்டுச் சமயங்களைப் பின்பற்றிச் சைவன் மேற்கொள்ள முற்படும் செயல்களுள் ஒன்று சிவாலயங்களில் அவன் தன் திருமணத்தை நிகழ்த்துதலாம். கோவில்களில் மண மண்டபம் நிர்மிப்பதை அறநிலயப் பாதுகாப்புச் செயல்களில் ஒன்று எனக்கருதும் காலமிது. சிவாலயங்களிற் கலியாணம் செய்தலின் பொருந்தாமையைச் சென்ற மாத "சமய சாதன" இதழின் தலையங்கத்திற் கண்டுணர்க.

    இனி சர்ச்சுகளில் வாரவழிபாடு நடைபெறுவது கண்ட சைவன், சிவாலயங்களிலும் வாரவழிபாடு கூட்டுப் பிரார்த்தனை ஆகியவற்றைப் புகுத்துகிறான். "துஞ்சலும், துஞ்சலிலாத போழ்தினும் நெஞ்சுகநைந்து நினைமின் நாள்தொறும்", "ஏற்றாயடிக்கே இரவும், பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்", "நறுமலர் நீருங்கொண்டு நாடொறும் ஏத்தி வாழ்த்தி" என வரும் சமயாசாரியர்களின் அருள் வாக்குகளின் பொருளுணராதோர் செயல்களுள் இது ஒன்று என ஒதுக்குக.

    மேனாட்டுச் சமயத்தைப் பரப்புவதற்குக் கல்வி நிலயங்களை அச்சமயத்தவர் நிறுவனம் செய்வதைக் கண்ணுற்ற சைவ சமூகம் தனது ஆலயங்களின் ஆதரவில் உயர்நிலைப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் உருவாக்க முற்பட்டுள்ளது நெல்லை, மதுரை, இராமேஸ்வரம், பண்பொழி ஆகிய பகுதிகளில் உள்ள தேவஸ்தானங்கள் உயர்நிலைப்பள்ளிகளை நடத்தி வருகின்றன. ஸ்ரீ பழனியாண்டவர் தேவஸ்தானம் ஒரு கல்லூரியை இயக்குகிறது. ஸ்ரீ குற்றாலநாதர் தேவஸ்தானம் ஒருபெண் கல்லூரி தொடங்க முயற்சி எடுத்து வருவதாகக் கூறுகிறது சமீபத்தில் வந்த ஒரு செய்தி. சைவ சமயத்தின் சால்பினைப் பரப்புவதற்கு இவை அதிகமாக உதவி செய்யா என்பது, இவற்றிற் கற்பிக்கப்படும் பொருள்களைப்பற்றிய கருத்துடையார்க்குத் தெற்றெனப் புலனாகும். சீவக சிந்தாமணி, மணிமேகலை, அகநாநூற்றுக் காதற்காட்சிகள், புறநாநூற்றுப் போர்க்கள நிகழ்ச்சிகள் முதலியவற்றைக் கற்பிப்பதற்காகவ சைவாலயங்களின்நிதி பயன் பட வேண்டும்? வட்டி, இலாப நஷ்டம், இன்ஷ்யூரன்ஸ், அமிலங்கள் தயாரித்தல், மிருகங்களின் வாழ்க்கை, அக்பர், பாபர் ஒளரங்கசீப், ஆங்கிலேயர் ஆகியோர்களின் ஆட்சி முறை, சைவ சமயக் கோட்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட டார்வின் கொள்கை ஆகிய இலெளகீக விஷயங்களைப் போதிப்பதற்காகவா சிவாலயங்களின் பொருள் பயன்பட வேண்டும்?

    "பாரதத்தின் உயிர் நாடி சமயம். சமயமென்னும் உயிர்நாடி அற்றுப்போகும்பொழுது பாரதம் இறந்து விடும்" என்பது விவேகானந்தரின் வீர வாக்கியம் (தினமணி 9-11-1963). இவ்வுயிர் நாடியாக விளங்கும் சமயம் யாது? அதனைப் பேணும் நெறி யாது? இவற்றையறிய விழைவற் பாரதம் இலெளகீக விஷயங்களில் தனது அறிவைப் பெருக்க முற்பட்டுள்ளது.
 

     சைவ சமூகமோ தனது உயிர் நாடியாம் சித்தாந்த சைவத்தின் உயர்வினை உணரும் அவாவும், ஆற்றலும் இழந்து, ஆசார, அனுஷ்டானங்களை அலட்சியஞ் செய்து, அவற்றிற்கு மாறுபட்ட விஷய ஞானத்தை வளர்க்கும் "கல்வி நிலயங்களை"ச் சிவாலய நிதியினைக் கொண்டு நிர்மிக்கும் பணியிலிறங்கி யுள்ளது. இது அறமா? அறநிலயப் பாதுகாப்பா? சைவ சமய மரபுடன் ஒத்த பெற்றிமையுடைத்தா?" என்ற வினாக்களைச் சைவர்கள் தம்மைத் தாமே கேட்டுப் பரிகாரம் தேடுக.
 

Click this to download the pdf version of this Essay
 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம"

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.


இந்தக் கட்டுரை சமய சாதனம் மலர் 1 இதழ் 5 (1 December 1963) இல் வெளியிடப்ப்டடது.