உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

எவனால் நடக்கும் உலகம்?

இத்தலைப்பு ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் திருவாக்கு
 

- சைவ சரபம் மா.பட்டமுத்து

   

  சந்திர மண்டலத்தில் இறங்குவதர்கன முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வுலகம் இலெளகிக முன்னேற்றமே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்குகிறது. எவனால் நடக்கும் உலகம்? அவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள உறவு யாது? அவனை அறிந்தால் விளையும் நலன் யாது? என்ற வினாக்கள் எல்லாம் இன்றைய "நாகரிக" மாந்தரின் கவனத்துக்கு எட்டாதனவாகும். அவர்கள் தொழுது வணங்கும் ஆலயங்கள், தொழிற்சாலைகளும், ஆய்வுக் கூடங்களுமே. அவர்கள் பின்பற்றும் மதமோ இலெளகிக முன்னேற்றத்தைக்குறிக்கோளாகக் உடைய நாஸ்திகமே. ரஷ்யா சென்று திரும்பிய இந்திய கல்வி அமைச்சர் திரு. சக்ளா. "What struck me most was that everywhere the only real religion is the religion of progress" (The Hindu 2-8-1964) என்று ரஷ்யாவில் தாமறிந்த மத உண்மையைக் குறிப்பிடுவதை ஈண்டு அறிக.

    இத்தகைய நாஸ்திக உலகம் யான் என்னும் செருக்கு மிக்க தலைவர்களுக்கிடையே உருள்கிறது. வாழ்வின் நோக்கமறியாது மருள்கிறது. வாழ்வினை நடத்திச் செல்லும் சக்தி யாது என்று அறியும் அவா இன்றி இயங்குகிறது. மானிட வாழ்வு அவனுக்கு அப்பாற்பட்ட ஒரு இறைவனால் இயக்கப்படுகிறது என்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சிகள் அவன் கண் முன் அளவிறந்து வருகின்றன. அவற்றைப் புறக்கணிக்கிறானவன். தன்னாலேயே உலகம் செயற்படுகிறது என்று இறுமாப்புக் கொள்கிறான். அந்த இறுமாப்பினை உடைத்தெறியும் உதாரணங்கள் பலப்பல.

    மேற்கு வங்க முதலமைச்சராயிருந்த டாக்டர் பி.சி.ராய 80 வயது நிறையப் பெற்றார். மறுநாள் 81வது பிறந்த தின விழா. அவ்விழாவிற் பங்கெடுக்க டாக்டர் ராதாகிருஷ்ணன கல்கத்தாவுக்கு வருகிறார். ஆனால் இரவில் மாரடைப்பு பி.சி.ராய்க்கு மரணம் தருகிறது. எவனால் நடக்கும் உலகம்?

    கேரளாவில் சுகாதார அமைச்சராய் இருந்த திரு.வேலப்பன் தமது 60-ம் வயது நிறைவு விழாவிற் பங்கெடுத்துவிட்டு உல்லாச காரில் மனைவியுடன் திருவனந்தபுரம் திரும்புகிறார். ஆனால் இருதய வேலை நிறுத்தம் மரணத்தைக் கொணர்கிறது அவருக்கு எவனால் நடக்கும் உலகம்?

    முன்னாள் பாரத விமானப் படைத் தளபதி ஏர்மார்ஷல் எஸ். முகர்ஜி விசேஷ விமான மொன்றில் பர்மா செல்கிறார். அங்கு ஓர் விருந்து. உணவிலிருந்த மீன்முள் மூச்சுக்குழலைத் தாக்குகிறது. ஆவி பிரிகிறது. விமானம் தளபதியின் சடலத்தோடு திரும்புகிறது. எவனால் நடக்கும் உலகம்?

    22-11-1963ல் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி டல்லஸ் நகரில் தமது மனைவியுடன் திறந்த காரில் செல்கிறார். சாலையின் இருமருங்கும் மகிழ்ச்சி நிறைந்த மக்கள் கூட்டம். காரின் முன்னும், பின்னும் பாதுகாப்புப் படைகள். எதிர்பாராத விதமாக இரு குண்டுகள் கென்னடியைத் தாக்குகின்றன. அந்தோ! உலக மாந்தரின் அன்பைக் கவர்ந்த கென்னடி ஆங்கே மரணமடைகிறார். எவனால் நடக்கும் உலகம்?

    இதே தருணத்தில் இந்திய விமான படை உயர் அதிகாரிகள் ஐவரைத் தாங்கிச் சென்ற விமானம் ஒன்று காஷ்மீர் எல்லையில் நொறுங்கி அவர்களைப் பலி கொண்ட செய்தியையும் கேட்கிறோம். எவனால் நடக்கும் உலகம்?

    22-5-1964ல் பாரதப் பிரதமர் நேருஜியிடம் "உங்கள் வாரிசு யார்?" என்று பத்திரிகை நிருபர் கேட்ட வினா விடை. "My life is not ending so soon" என்று அழுத்தம் திருத்தமாக விடை கூறி அவர் ஒதுக்கினார். நான்கு நாள் நல்ல ஓய்வு எடுத்தார் டேராடூனில். புத்துணர்ச்சியோடு புது டில்லி திரும்பினார். தமது வாழ்வின் கால எல்லையை நன்கு மதிப்பிட்டு விட்டதாகக் கருதிய நேருஜி 27-5-1964 காலை 6-20க்குப் பிரஞ்ஞை இழந்தார். மாலை 2 மணிக்கு ஆசிய ஜோதி அணைந்து விட்டது. எவனால் நடக்கும் உலகம்?

    இதே சமயத்தில் பஞ்சாபில், சண்டிகார் என்ற நகரிலுள்ள ஓர் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் அனுபவம் மிக்க டாக்டர்களுக்கிடையே உணர்வின்றி இருந்தார் ஆந்திரக் கல்வி அமைச்சர் திரு.பி.வி.ஜி.ராஜு. 11-5-1964ல் கார் விபத்தில் உணர்விழந்த அவர் 40 நாட்கள் பிரஞ்ஞை சிறிதுமின்றி இருந்தார். இறந்து விடுவாரோ என்று எல்லோரும் வருந்திக் கொண்டிருந்த நிலை அது. இப்போது சுய உணர்வு பெற்று விட்டார் என்ற செய்தி வருகிறது. எவனால் நடக்கும் உலகம்?

    கேரள முன்னாள் அமைச்சர் திரு.பி.டி.சாக்கோ 1-8-1964ல் கவிலம்பாரா என்ற கிராமத்திலிருந்து கள்ளிக்கோட்டைக்குத் திரும்பினார். வரும் வழியிலேயே இதயவலி தாக்கி மரணம் எய்திய துயரச் செய்தியைக் கேட்கிறோம். எவனால் நடக்கும் உலகம்?

    "பாரதம் காமதேனுவாகும். அதனைப் பிரித்தல் அக்காமதேனுவைக் கொல்வதற்குச் சமம்" என்று நாட்டுப் பிரிவினையைத் தடுத்துவிட முயன்ற காந்தியடிகளும, காங்கிரஸ் கட்சியும் கண்டது என்ன? இந்தியா, பாகிஸ்தான் என்று பாரதம் பிரிந்த அவல நிலையை யன்றோ? எவனால் நடக்கும் உலகம்?

    ஐந்தாண்டுத் திட்டங்களால் தேனும், பாலும் தெருவெல்லாம் ஓடச் செய்யலாம் என்ற ஆர்வத்தோடு செயற்பட்ட நமது பாரதத்திற்குத் திடீரெனக் கிடைத்த பேரதிர்ச்சி சீன ஆக்ரமிப்பு அல்லவா? அதனால் விளையும் தீமைகள் எத்தனை! எத்தனை! வருஷந்தோறும் ரூ.800 கோடிக்கு மேல் ராணுவச் செலவு செய்ய வேண்டிய நிலை எங்ஙனம் எழுந்தது? எவனால் நடக்கும் உலகம்?

    இவை போன்ற நிகழ்ச்சிகள் எண்ணில் அடங்கா. இவற்றிற் கெல்லாம் காரணம் இயற்கை என்பர் இன்றைய "மேதை"கள். இயற்கை செயற்கை என்ற சொற்களின் பொருள் உணராத அவர்தம் அறியாமையை என்னென்பது!

இவற்றை நன்கு சிந்திப்போமாக. மானிட வாழ்வின் நிச்சயமற்ற நிலையை உணர்வோமாக.

"ஆட்டுவித்தா லாரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தா லாரொருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தா லாரொருவர் ஓடாதாரே
உருகுவித்தா லாரொருவர் உருகாதாரே
பாட்டுவித்தா லாரொருவர் பாடாதாரே
பணிவித்தா லாரொருவர் பணியாதாரே
காட்டுவித்தா லாரொருவர் காணாதாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே."

என்ற ஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகளின் அருள் வாக்கினை என்றென்றும் உளத்திற் கொள்வோமாக.
எவனால் நடக்கும் உலகம்? என்ற வினாவிற்கு

இந்துவேணிமுடியானால் நடக்கும் உலகம் என்ற விடையைத் தெரிவோமாக.

     

Click this to download the pdf version of this Essay
 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.


இந்தக் கட்டுரை சமய சாதனம் மலர் 2 இதழ் 1 (1 August 1964) இல் வெளியிடப்ப்டடது.