உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

நம் மறை எது? நான்மறை எது?

சைவ சரபம் மா.பட்டமுத்து

சங்கரன்கோவில்

   "சிவ சிவ" ஜுன் 2011 இதழில் பக்கம் 22, 23-ல் காணப்படும் "நம் மறையில் உள்ளன நான்மறையில் இல்லாதன" என்ற ஆய்வுக் கட்டுரையின் ஈற்றில் "நான்மறைகளாம் இருக்கு, எசூர், சாமம், அதர்வணம் என்ற நூல்களில் சிவன் என்ற சொல்லில்லை என்றும் பலமுறை கண்டுள்ளோம்" எனவும், "இறைவனை மாதொரு பாகனாகப் போற்றும் கொள்கை காணப்படவில்லை" எனவும் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகிறார்.  இக்கூற்றால் விளையும் சில ஐயப்பாடுகளை ஈண்டுக் காண்போம்.

    "நம்மறை எது?" இதில் வரும் நம் தமிழர்களா? சைவர்களா? வைணவர்களா? நான்மறை யாது? இது கைபர் கணவாய் வையாக வந்த ஆரியர்கள் இறக்குமதி செய்ததா? சிவன் என்ற சொல்லும், மாதொரு பாகனைப் போற்றும் கொள்கையும் காணப்படாத நான்மறை தமிழர்தம் மாண்புக்குப் புறம்தானே! தமிழர் என்று கட்டுரையாசிரியர் யாரைக் குறிப்பிடுகிறார்? தமிழகத்தில் வாழும் பிற மதத்தவரும் தமிழர்கள்தானே!

    "வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதம் நாமம் நமச்சிவாயவே" என்ற ஸ்ரீ ஆளுடையப் பிள்ளையார சுட்டிக் காட்டும் நான்கு வேதம் நம் மறையா? நான்மறையா? நம்மறை எனின் அது நான்காவது எப்படி? திருமுறைகள்தாம் நமது வேதம் எனின், சுவாமிகள் "வேதம் பன்னிரண்டிலும்" என்றல்லவா அருளியிருக்க வேண்டும்.

    அறுபான் மும்மைப் பெரியவர்களில் ஸ்ரீ உருத்திர பசுபதி நாயனார் இரவும் பகலும் கழுத்தளவு நீரில் நின்று இடைவிடாது உருத்திரம் ஜெபித்து உமையொரு பாகனார் திருவடியடைந்தார். அவ்வுருத்திரம் எங்கேயுள்ளது?

    நம்மறையிலா? நான்மறையிலா? நான்மறையினில் எனில், நாயனார் ஆரியராகிவிடுவாரா? நம் தமிழர் ஆகமாட்டாரே! "வேத புருஷனுக்கு அவ்வுருத்திரம் கண்ணும் பஞ்சாட்சரம் கண்மணியும் ஆவன" என்று யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீமான் ஆறுமுகநாவலர் கூற்றினைச் சிந்திக்க. வேதத்தின் நடுவே உருத்திரமும் அதன் நடுவே பஞ்சாட்சரமும் உள்ளன.  நான்மறையில் 'சிவன்' என்ற சொல்லே இல்லை என்பதற்கு இது முரணன்றோ? அப்பஞ்சாட்சரத்தில் 'சிவ' என்பது உமையொரு பாகனைக் குறிப்பது அல்லவா? எனவே, "நான்மறையில் உமையொரு பாகனைப் பற்றிய குறிப்பில்லை" என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்?

    "அம்மையப்பனாய் இறைவனைக் கருதி வழிபடுவது தமிழர் தம் மாண்பு" என்று கட்டுரை கூறுகிறது.  தமிழகக் கிறித்துவரும், தமிழக இசுலாமியரும், 'கடவுள் இல்லவே இல்லை' என்று உளறும் தமிழகப் பகுத்தறிவாளர்களும் இம்மாண்பு உடையவர்களா? தமிழர்களாகிய அவர்கள் அம்மையப்பன் வழிபாட்டினை ஏளனம் செயது ஒதுக்கிவிடுபவர்கள் அல்லவா? எனவே, கட்டுரையாளர் 'தமிழர்கள்' என்று கூறுவதை விட்டுச் 'சைவர்கள்' என்று வெளிப்படையாகக் கூறியிருக்கலாமே?

    கோவை தந்த சிவஞானப் பரிதி சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் அவர்களும், யாழ்ப்பாணம் தந்த சிவஞான மாணிக்கம் ஆறுமுக நாவலர் அவர்களும், தேவாரம் வேதசாரம், திருநான்மறை விளக்க ஆராய்ச்சி முதலிய ஆய்வு நூல்களும் நம் மறை நான்மறைகள் தான் என்ற உண்மையை நிலைநாட்டுவது கண்டு தெளிக.

"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"
"வைதிக சைவம் பரக்கவே"

 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெ ல்லாம

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.