உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

"பரமேசுரனும் பஸ்மாசுரனும்"

சைவ சரபம் மா.பட்டமுத்து

   
 


    சித்தாந்த சைவர்களை வேத, சிவாகம நெறிக்குப் புறம்பாக இழுத்துச் செல்லும் கூட்டங்கள் மலிந்த காலமிது. அவற்றுளொன்று மாயாவாதக் கொள்கையுடைத்து. உயிர்களே பிரமம் என்பது அதன் கொள்கை. சிவாகமங்களின் சீர்மையுணராது, சிற்ப சாஸ்திரத்தோடும், பரத சாஸ்திரத்தோடும் அவற்றைச் சேர வைத்து ஆராயும் சதஸைக் கூட்டியதும் அந்தக் கூட்டமே. "சிவனிடத்து விஷ்ணு சில சமயங்களிற் சரணடைவார். சில வேளைகளில் சிவன் விஷ்ணுவின் பால் தஞ்சம் புகுவார். இந் நிகழ்ச்சிகள் புராணங்களில் விரவி வருவன. அகலின் இவ்விருவரையும் வேறுபடுத்திக் கூறுதல் தகாது. இருவரும் ஒரே பிரமம்" என்று கூறித் தனது கொள்கைகளைப் பரப்பும் கூட்டம் அது. அவ்வகையில், சிவனைக் குறைத்துக் கூறும் குறிக்கோளுடன், "பஸ்மாசுரனுக்கு வரத்தை வழங்கி விட்டுத் தமது சிரமீதே கரத்தை வைக்க வந்த அவனுக்கு அஞ்சி, சிவபிரான் ஓட, மோகினி ரூபங் கொண்டு விஷ்ணு அவ்வசுரனைக் கொன்று அவரைக் காப்பாற்றினார்" என்று சிவபுராணம் கூறுவதாக அக்கூட்டம் சொல்லும்.


    சிவநிந்தை ரூபமான இக்கதை சிவபுராணத்தில் இடம் பெறுமா? அது ஆராயத்தக்கது. வடமொழியிலுள்ள பார்க்கவ புராணத்தின் பெயர்ப்பாக, ஸ்ரீ கச்சியப்ப முனிவர் அருளிச் செய்த "விநாயக புராணம்" என்ற நூலொன்றிற்றான் இச்சரித்திரம் காணப்படுகிறது.
 

    சிவபிரானிடம் பிரமசுரன் (பஸ்மாசுரன்) தனது கரத்தை யார் சென்னி மீது வைப்பினும் அவர் வெந்து பொடியாக வேண்டும் என்ற வரங் கேட்கிறான். அத்தகைய வரம் கேட்ட அவ்வசுரனது அறியாமையினையும், அதனோலேயே அவன் அழியப் போகும் நிலையினையும் திருவுளத்திற் கருதி, நகைத்து, நாதன் வரம் வழங்குங் காட்சியினை "நாட்டநுதல் கரந்தவர் நகைத்து அவனுக்கது கொடுத்தார்" என்று ஸ்ரீ கச்சியப்ப முனிவர் சித்திரித்துக் காட்டுகிறார். இதனை யுணராது, 'பின் விளைவு தெரியாது வரங் கொடுத்துச் சிவன் ஏமாறினார்" என்று கூறுவோர் கூற்று உண்மையுணராதோர் கூற்றென ஒதுக்குக.


    இனி அவர் திருமுடிமீதே தனது கரம் வைக்க அசுரன் துணிந்த பொழுது, "ஒப்பரிய வரங் கொடுத்த ஒருதாமே அழித்துவிடல் செப்பம் அல" என இறைவன் 'செறிந்த வியாபகரானார்' தனக்கு அஞ்சிச் சிவபிரான் ஓடி ஒளிந்ததாகக் கருதி, உலகெங்கும் அவரைத் தேடினான் அசுரன். வியாபகமாய் இறைவன் மறைந்தமையை அறியும் அருட் பேறு இல்லாமையானன்றோ, அவ்வசுரபுத்தி 'சிவன் ஓடி ஒளிந்ததாகக் கருதுகிறது? ஆனால் அவ்வசுரபுத்திக்கு முற்றிலும் மாறுபட்ட தெய்வ புத்தியை' "விச்சுவ ரூபனை இந்த வெய்யவன் காண்பானல்லன்" என்று உணர்ந்து நிற்கும் நாராணனிடத்துக் காண்க.


    இனி, மோகினி ரூபங்கொண்டு விஷ்ணு ஆண்டு வருவதற்குக் காரணம் யாது? சிவனைத் தேடி அலையும் பிரமசுரன் "முச்சகமும் இனி நீறாய் முடிப்பன்" என்று விஷ்ணு உணர்கிறார். மூவுலக வுயிர்களும் அவனால் பஸ்மமாக்கப் படுமாயின் தமது திதித் தொழில் நிகழாது. ஆகலின், தமது தொழிலைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடனே அசுரனை அழிக்க விஷ்ணு முற்படுகிறார். இத்தகைய சுயநலம் மிக்க விஷ்ணுவின் செயலைச் சிவபிரானைக் காப்பாற்ற வந்த செயல் என்று திரித்துக் கூறுதல் வஞ்சப் பேச்சு என்றுணர்க.
மேலும், விஷ்ணசிவபிரானைககாப்பாற்ற வருவாராயின், ஏனதமதயதார்த்த ஆணவடிவிலவந்தாரில்லை? பெணவடிவமகொண்டமைக்குககாரணமயாது? உண்மரூபத்திலவந்தாலசிவபிரானவரமபெற்ற பிரமசுரனதசுரமதம்மையுமசாம்பலாக்குமஎன்றஅவரஅச்சஙகொண்டமைதானஅதற்குககாரணம்? இவற்றை யெல்லாம் அம்மாயாவாதிகள் சிந்தித்ததுண்டா?
 

    'அசுரனுக்கு அஞ்சி ஓடிய சிவனை விஷ்ணு காப்பாற்றினார்' என்று பேசும் மாந்தரின் வெள்ளறிவினை மேற் கூறிய விஷயங்கள் தெற்றேன விளக்கியமை காண்க. இவ்வரலாற்றின் நுட்பங்களை மேலும் அறிய விரும்புவோர்,


    வைதிக, சைவ சித்தாந்த சண்டமாருதம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகர் இயற்றிய, 'சிவபாரம்யப் பிரதரிசிநி' என்ற நூலில் உள்ள 'பஸ்மாசுர விஜயம்' என்ற பகுதியைப் படித்துணர்க.

 

Click this to download the pdf version of this Essay
 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம"

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.

 


இந்தக் கட்டுரை சமய சாதனம் மலர் 1 இதழ் 4 (1 November 1963) இல் வெளியிடப்ப்டடது.