உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

பிரிந்து சென்ற பெருஞ்சுடர்
 

- சைவ சரபம் மா.பட்டமுத்து

   

ஸ்ரீலஸ்ரீ ஈசான சிவாசாரியார்    விஞ்ஞானமும், தொழிலியலும் மனிதனை இயந்திரமாக மாற்றுவதில் மகத்தான முன்னேற்றம் பெற்று வரும் இன்றைய உலகம் சமயங்களின் இன்றியமையாமையைச் சரிவர உணரவில்லை. உணவு, உடை, உறைவிடம், உல்லாசப் பொழுது போக்கு இவையே நம் வாழ்வின் இலசியங்கள் என்று பறைசாற்றி, மக்களை மதங்களினின்று வேறு கோணத்தில் அழைத்துச் செல்லும் "பெரியோர்" நிறைந்த காலமிது, சமயக் கண்கொண்டு நோக்குங்கால், இன்றைய மனிதர்களின் இழிநிலை - விலங்கினின்று வேறுபடா வாழ்வு நடத்தும் சீர்கேடான நிலை-தெற்றென விளங்கும்.

    சைவ மக்கள் கொண்ட கோலமோ அளவிலடங்கா வருத்தம் தருவதாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஒரே இருள். நமது நாயகன் யார்? அவன் பொன்னார் திருவடிகளைப் போற்றும் நெறி யாது? அவனருள் வெள்ளத்தே திளைத்துச் செம்மாந் திருந்தருளும் சிவநெறிச் சான்றோர் காட்டும் வரம்பு கடவா வாழ்வின் சீர்மிகு தன்மை யாது? இவற்றை யெல்லாம் அறிய அவாக் கொள்ள வேண்டிய சைவ உள்ளம் மயக்கம் நிறைந்த சூழ் நிலையில் தன்னை மறந்து கிடக்கிறது.

    இல்லாத ஒரு கடவுளை இருக்கிறார் என்றெண்ணி உங்கள் பொன்னான வாழ்வைப் புறக்கணியாதீர் என்று உபதேசம் செய்யுங் கூட்டம் ஒரு புறம். "கடவுள் ஒருவர் உண்டு என்பதை நாங்கள் நம்புகிறோம்; ஆனால் அவர் பெயரைச் சொல்லித் தங்கள் வயிறு வளர்க்கும் கூட்டத்தையே வெறுக்கிறோம்" என்று சொல்லி எல்லாமறிந்தவர்களாகப் பாவனை செய்து பிறரை ஏமாற்றும் "பகுத்தறிவு வாதிகள்" கூட்டம் மறுபுறம். "சைவ சமயம் தமிழ்ச் சமயம்; சிவபிரான் தமிழ்க் கடவுள்" என்றெல்லாம் முழக்கமிட்டுத் தமிழ் மொழிக்கு ஏற்றம் நல்கி, வடமொழியின்பால் வெறுப்புக் கொண்டு, சைவ சமயத்தின் பிரமாண நூல்களை உதாசீனம் செய்து குழப்பம் ஏற்படுத்தும் கூட்டம் பிறிதொரு புறம். சைவ சமயச் சின்னங்கள் உள்ளங் கவரும் வகையிலணிந்து கொண்டு, "ஒரு கடவுள் அம்பலத்தே ஆடுகிறார்; மற்றொரு பிரான் அருகே அரவணையில் அறிதுயில் கொள்கிறார்; முன்னவர் அரவத்தை ஆபரணமாகக் கொள்பவர்; பின்னவர் பாம்பினைப் பள்ளியாகக் கொள்பவர்; அவர் அபிஷேகப் பிரியர்; இவர் அலங்காரப் பிரியர். எனவே இருவரும் ஒருவரே; அவரிடையே பேதமில்லை" என்ற ரீதியில் வாதஞ் செய்யும் "சைவமணிகள்" இன்னொரு பக்கம் இவர்களுக்கிடையே அகப்பட்டுக் கொண்ட சைவன் இன்று மயக்கம் நிறைந்த மனத்தோடு, நன்னெறி காணும் நாட்டமின்றிகாட்சியளிக்கிறான்.

    ஆனால், இருள் நிறைந்த இச் சூழ்நிலையில், சித்தாந்த சைவர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு ஒன்று சென்னிமலைப் பதியில் அவதரித்தது. பழனிப் பதியில் உறைந்து "ஈசான சிவம்" என்ற திருநாமம் கொண்டு திகழ்ந்தது. சைவநெறியின் மேன்மையினை உலகிற்குச் சுட்டிக் காட்டி வந்த சுடர் அது, "தூநீறு துதைந்திலங்கு தோள்", அருட்சுடர் பரப்பி உளமயக்கறுக்கும் ஒளி நிறை நயனங்கள், வேதம், சிவாகமம், திருமுறை, சித்தாந்த சாஸ்திரம் ஆகியவற்றின் ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவுபட எடுத்துரைக்கும் திருவாய், அழிவு நெறியிற் பீடுநடை போடும் இந்த நூற்றாண்டில், நமது சமயத்தின் சால்பினை நன்கறிந்துய்ய வேண்டும் என்று மெய்யான ஆர்வங் கொண்டு தம்மை அடுத்தவர்பால் பேரிரக்கம் காட்டிய அருள் உள்ளம் ஆகியவை கொண்ட தாய் நம்மை அருகேயிருந்து காத்தது அந்த பேரருட் பிழம்பு.

    கடந்த பங்குனித்திங்களில், நமது தீவினைப் பயனின் முதிர்ச்சியால், அவ்வருட் சுடர் நம்மைப் பரிதவிக்க விட்டு நீங்கிற்று. எங்ஙனமேனும் சிவாகமங்களனைத்தையும் சேகரித்து அச்சிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமது வாழ்வை அர்ப்பித்த தன்மையினையும், எண்ணற்ற சைவ நன்மக்களுக்குச் சிவதீக்ஷ அருளி, சைவ வரம்பினைத் தெளிவாகச் சுட்டிக் காட்டிய உயர்வினையும், நமது ஆலயங்களின் கும்பாபிஷேகம் முதலியவற்றை வேத, சிவாகம நெறிப்படி நடத்தி அருள் நல்கிய பான்மையினையும், பெரிய புராண அருட்பாடல்களின் பொருட் செறிவினை உவகை மீதூர அருள் வெள்ளம் பெருக எடுத்துரைக்கும் பொலிவினையும், ஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த ஒப்புயர்வு அற்ற திராவிட மகா பாஷ்யத்தின் சால்பு. ஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள், ஸ்ரீ சபாபதி நாவலர் அவர்கள் போன்ற சான்றோர் குறிப்பிட்டுச் சென்ற உயர் கருத்துக்களின் மாண்பு ஆகியவற்றைக் கண்ணீர் ததும்ப விரித்துரைக்கும் காட்சியினையும் எண்ணி எண்ணிப் பார்க்குங்கால் அவ்வருள் விளக்கு நம்மை விட்டு நீங்கியமை அளவற்ற துயரம் பெருக்குகிறது.

என் செய்வது! பிரிந்து சென்ற அப்பெருஞ் சுடர் சுட்டிக் காட்டிய நெறியினை நாம் அதனருளாலே உறுதியாகப் பின்பற்றுவோம். கங்கைவார் சடையனின் மலர்க்கழல் மறவாது பேணும் செம்மையினை வளர்க்க வல்ல அந்த காந்தி மிகு விளக்கினைப் போற்றி வாழ்வோம். அவ்வருட் சுடரின் அருளாசி அடைந்து, சித்தாந்த சாஸ்திரங்களைத் தெள்ளிதின் எடுத்தியம்பும் சிவநெறிச் செம்மல்களை ஆதரித்து நல்வாழ்வு நடத்துவோம்

 

Click this to download the pdf version of this Essay
 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம"

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.


இந்தக் கட்டுரை சமய சாதனம் மலர் 1 இதழ் 3 (1 October 1963) இல் வெளியிடப்ப்டடது.