உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

"சமயமும் சமூகமும்"

- சைவ சரபம் மா.பட்டமுத்து

   


    நாகரிகம் என்ற பெயரால் பண்பாடற்றசெயல்கள் பலவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் காலமிது. சமயம் மாந்தரின் ஆன்ம லாபத்துக்குதவும் நெறிகளின் தொகுப்பு என்ற எண்ணம் மக்களிடையே மிகவும் குறைந்து வருகிறது. மதம் என்ற சொல்லைக் கேட்டவுடன் இன்றைய அரசியல்வாதிகளும், வாலிபர்களும் தங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. இளைஞர் சமூகம் இலெளகிக விஷயங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளமையால், கடவுள் பக்தி, மதம், ஆசார அனுஷ்டானங்கள் ஆகியவற்றைப் புறக்கணித்து விட்டது. இந்த இழிநிலைக்குக் காரணம் யாது?

    விஞ்ஞான படைப்புக்கள் இவ்வுலகை இன்பலோகமாக்கி விடும் என்ற பொய்க் கனவு, மனம் போன போக்கில் மாந்தரைச் செல்ல விடாது தடுத்து, ஒழுக்கத்தினை வளர்க்கும் நியமங்கள் மதங்களில் நிறைந்து காணப்படும் நிலைமை, மனிதரின் கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டிவிட உதவும் எண்ணற்ற சந்தர்ப்பங்கள், சமயச் சான்றோர் காட்டிய வழிகளில் அவநம்பிக்கை என்னும் இவை போன்றவையே மக்களின் பண்பாட்டுக் குறைவுக்குக் காரணங்களாம்.

    மதச் சார்பற்ற நாடாம் இது. சைவ சமய ஆலயங்களில் நடக்கும் பல செயல்களைக் கவனித்தால், அக்கொள்கை சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்ற ஐயம் திண்ணமாக எழும். சைவாலயத்தின் திருக்கோபுரம் ஸ்தூல லிங்கம் என்பது சிவாகமங்களின் கூற்று. ஆனால் அதன் மீதோ தேசீய விழா நாட்களில் இலெளகிக சம்பந்தமான கொடிகள் பறக்கின்றன.

    கல்வி நிலயங்களிலோ சமய உணர்வு வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களே இல்லை. மாணவரின் இளம் உள்ளங்களில் இறைவனைப் பற்றிய எண்ணங்கள் எழுவதற்குரிய வாய்ப்புக்கள் ஆண்டு மிகக் குறைவு. ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, அரசியல் இவையே மாணவர்க்குக் கற்பிக்கப்படும் வேதங்கள். அவை மனிதனிடம் உள்ள விலங்கியல்பினை நீக்க உறுதுணையாகா என்பதை "It was also proved that education, including science and engineering education, was no guarantee against animality and criminality"- [Swarajya - 2-5-1964] என்பதால் உணர்க.

    மனதை மயக்கும் சூழ்நிலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பயின்று வரும் மாணவன் தனது மனத்தின் மாண்பினைப் பற்றிய எண்ணமே இல்லாது உலக வாழ்வில் மூழ்குகிறான். கண்ணைக் கவரும் படங்கள் நிறைந்த சுவடிகள், திரைப்படங்கள், உலக இன்பத்தை மிகைப் படுத்திப் பேசும் சொற் பொழிவுகள் ஆகியவை அம்மாணவனை மதத்திலிருந்து வெகு தொலைவிற்கு அகற்றி விடுகின்றன. சமய மரபுகளைப் பின்பற்றி வரும் பெரியோர்களை ஏளனஞ் செய்து மகிழ்வது அவனது வாழ்வின் அடுத்த கட்டம். "கற்றதனாலாய பயன் என் கொல் வாலறிவன் நற்றாள் தொழா அரெனின்" என்பன போன்ற திருக்குறட்பாக்களெல்லாம் அவனது கவனத்தைக் கவரமாட்டா. அவனுக்குக் கடவுள் பக்தி சிறிதளவு இருக்குமேனும் அதனையும் அளித்துவிட எண்ணற்ற அரசியல் வாதிகள் ஆயத்தமாக உள்ளனர்.

    சிவாலய சொத்து மதச் சார்பற்ற கல்விக்குப் பயன்படுத்தப்படுகிறது. இலெளகிகக் கல்லூரிகளும், பள்ளிகளும் சிவாலயங்களின் ஆதரவில் நிறுவனம் செய்யப்படுகின்றன. ஆனால் அக்கல்வி நிலயங்களில் சித்தாந்த சைவக் கருத்துக்களும் போதிக்கப்படுமா? அண்ணாமலைப் பல்கலைக் கழக உப அத்யட்சகர் டாக்டர் C.P.இராமசாமி ஐயரவர்கள், "They failed to teach religion in educational institutions on the pretext that their's was a secular state and in the fear of incuring the minister's displeasure. Temple funds were being spent IN LAKHS for running an "anatomical museum" to satisfy the wishes of the Chief Minister of a state" [The Hindu 11-5-1964] என்று திருப்பதியில் பேசிய உரை ஈண்டு நினைவு கூரற்பாலது.

    சைவாலயங்களில் பிறமதச் சார்புடைய சொற்பொழிவுகளுக்கு இடம் தருதல் சரியா? வேற்றுமத கதா காலக்ஷேஷபங்கள், புத்தகங்கள் ஆகியவற்றிற்குச் சைவ மடங்கள் ஆதரவு நல்குதல் சரியா? சைவ மாணவர்களுக்கு நமது சமயத்தின் சால்பினை எடுத்துரைக்க வேண்டாமா? சித்தாந்த சைவர்கள் இவற்றைச் சிந்திப்பார்களாக.


   

Click this to download the pdf version of this Essay
 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.


இந்தக் கட்டுரை சமய சாதனம் மலர் 1 இதழ் 11 (1 June1964) இல் வெளியிடப்ப்டடது.