உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சிவசேவையே சேவை

- சைவ சரபம் மா.பட்டமுத்து

   


  ஒரு முறை விவேகானந்தரிடம் திருப்பத்தூரிலிருந்து சென்ற ஒரு சைவ கோஷ்டி, "பிரமம் தான் மாயை காரணமாக உலகமாகத் தோன்றுகிறது என்கிறீர்களே, ஏன், எப்போது, எதற்காக எப்படி தன்னிலேயே லயித்திருந்த பிரமம் இப்படி உலகத் தோற்றத்தை ஏற்படுத்தியது?" என்று வினவினதாம். உடனே விவேகானந்தர், "ஏன், எப்போது, எதற்காக என்பதெல்லாம் தோற்றமாகிய இந்த உலகு உண்டான பின்தான் எழுகிற விஷயங்கள். இந்த உலகுக்கு மட்டுமே தொடர்புள்ள விஷயங்கள் அதன் தோற்றத்துக்கு முன் உள்ள நிலையில் - காரண காரியமும், மாறுபாடும் அறியாத பிரம்ம நிலையில் - எழும்பவே எழும்பாது. உங்கள் கேள்விக்கு அர்த்தமே கிடையாது....இந்த விசாரமெல்லாம் எதற்கு? இவற்றால் என்ன புண்ணியம்? ஆண்டவனைத் தேடுங்கள். அவனுக்குச் சேவை செய்யுங்கள். ஆண்டவனைத் தேடுவதும், சேவை செய்வதும் என்ன? ஏழை எளியவர்களைத் தேடிச் சென்று அவர்களின் துயர் துடைப்பதுதான்" என்று பதிலிறுத்தாராம். (பக்கம் 44 கல்கி 24-5-1964).

    ஏன், எப்போது, எதற்காக பிரமம் உலகத் தோற்றத்தை ஏற்படுத்தியது என்ற வினா உலகத் தோற்றத்துக்கு முன், பிரமம் தன்னிலையில் உள்ளபோது எழும்பாது. ஏன், எப்போது எதற்காக என்ற கேள்விகளுக்கு இடமில்லாத நிலை மாறுபாடின்றி பிரமம் இருக்கும் நிலை. அது உலகமாக மாயையில் பிரதிபிம்பத் தோற்றமாக மாறும்பொழுதுதான் அவ்வினாக்கள் எழுமாம். இங்ஙனம் அர்த்தமில்லாத, நோக்கமில்லாத லீலையைக் கொண்டுள்ளது மாயாவாதப் பிரமம், அதனால் யாருக்கு என்ன பயன்? "தோற்றமாகிய உலகு" என்றாரவர். உலகே தோற்றமாயிருக்கும்போது ஏழை, எளியவர்கள், அவர்களைத் தேடிச் செல்லுதல், அவர்களுக்குச் சேவை செய்தல் இவையெல்லாம் தோற்றம் தானே? "ஆண்டவனைத் தேடுங்கள். அவனுக்குச் சேவை செய்யுங்கள்" என்று உபதேசம் செய்தாரவர். எல்லாமே பொய்யான உலகில் ஆண்டவனை எங்கே சென்று தேடுவது? யார் தேடுவது? தேடுவதும் பொய் தானே? ஆகாயத் தாமரையை எட்டிப்பிடிக்க முயலும் மலடி மகனுக்கே அவ்வுபதேசம் பொருந்து மென்க.

    மானிட சேவையே சிவசேவை என்று அறிவுரை கூறிய இதே விவேகானந்தர் தமது இறுதிக்காலத்து க்ஷரபவானியில் உள்ள அம்பாள் ஆலயம் அந்நியர் படையெடுப்பில் பழுதுற்றிருந்த நிலையை எண்ணி வருந்துகையில், "இந்தியர்கள் எல்லாம் அம்பிகையின் நடமாடும் கோயில்கள்; அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்று எண்ணினேனே, அதுவும் தவறு தான்! என்னுடைய உழைப்பு இவளுக்கு ஒரு தேவையே இல்லையே! நான் இல்லாவிட்டால் இன்னொருவர் மூலம் அவள் இந்தக் காரியத்தைச் செய்து கொள்வாள்! அப்படி என் மூலமே அவள் செய்துகொள்ள விரும்பினாலும் அது அவளது சங்கல்பம் ஒன்றினாலேயே நிகழ வேண்டுமேயன்றி என்னுடைய முயற்சியினால் அல்ல. இனி அசடன் போல் முயல மாட்டேன்" என்று (பக்கம் 60. கல்கி 14-6-1964) உறுதி பூண்டார். முன் சொன்னதும், இதுவும், கனலும் புனலும் போல் ஒன்றை ஒன்று மறுக்கவில்லையா?

    பூதானம், அன்னதானம், அனாதை ஆசிரமம் என்றெல்லாம் கூறி "மக்கள் சேவையே மகேசுவரன் சேவை" என்று முழக்கமிடுவோரனைவரும் விவேகானந்தர் தமது இறுதிக் காலத்தில் உணர்ந்து உரைத்த முற்கூறிய உண்மையினைத் தெரிந்து மக்கள் சேவை வேறு, மகேசுரன் சேவை வேறு என்பதை அறிவது நலம்.

    சிவபிரனை "வழிபடுதலே நல்லதோரறம்; அவனையன்றிச் செய்வனவெல்லாம் வீணென்பது போதருதலானும், புண்ணியமாவது வேதாகமங்களின் அவ்விறைவனால் விதிக்கப்படும் விதியாகலானும், ஒன்றினும் விருப்பிலனாகியும் உயிர்கண் மாட்டுக் கருணை பூண்டு விருப்பஞ் செய்யுமவ் விறைவன் திருவடிப் பூசனையே ஒருதலையாகச் செய்யற்பாற்று என்பதாம்" என்ற ஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகளின் அருள் வாக்கு (ஸ்ரீ சிவஞான சித்தியார் சுபக்கம் 2-2-1927 பொழிப்புரை மகேசுர சேவையாவது இன்னது எனத் தெரிவிக்கிறது.

     

Click this to download the pdf version of this Essay
 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.


இந்தக் கட்டுரை சமய சாதனம் மலர் 2 இதழ் 1 (1 August 1964) இல் வெளியிடப்ப்டடது.