உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

"தாண்டவபுரத்தில்" தடுமாற்றம்

- சைவ சரபம் மா.பட்டமுத்து

சங்கரன்கோவில்


    தினமணி 2-1-2012 தேதி நாளிதழில் நூல்; அரங்கம் பகுதியில்  திரு.சோலை சுந்தரபெருமாள் எழுதிய தாண்டவபுரம் நூல்( பாரதி புத்தகாலயம், பக்கம் = 700, ரூ390. Phone: 044-24332424) பற்றிய மதிப்புரையில் ஆளுடையப் பிள்ளை (திருஞான சம்பந்தர்) தேவதாசிகுலப் பெண்ணான மனோன்மணியும் இக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டார்கள்"  என்று தன்னுடைய நூலைப் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்.


  

 பெறுநர்

    திரு.சோலை சுந்தரப் பெருமாள்

    பாரதி புத்தகாலயம்

    சென்னை - 18

அன்புமிக்கீர்,

    வணக்கம்.

    தங்களின் "தாண்டவபுரம்" என்ற நூலின் மதிப்புரையினைத் தினமணி (02.01.2012) இதழில் கண்டேன்.  அந்நூலில் தாங்கள் "ஆளுடைய பிள்ளையும் தேவதாசிகுலப் பெண்ணான மனோன்மணியும் இக வாழில் ஈடுபாடு கொண்டார்கள் என்று நான் புனைந்திருப்பது வாசகர்களைப் புளகாங்கிதம் அடையச் செய்யும் நோக்கில் இல்லை" எழுதியிருக்கிறீர்கள், இக்கூற்று சைவ மக்களின் இதயத்தைப் புண்ணாக்கும் கூற்றாகும்.

    திருஞானசம்பந்தப் பெருமானின் திருவவதாரப் பெருமையினை அறிய உதவும் ஒரே நூல் தெய்வச் சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணமாகும். அவ்வரிய நூல் கூறும் ஆளுடைய பிள்ளையாரின் வாழ்க்கை வரலாற்றில் ஓரிடத்தேனும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமில்லை.  பல்லாயிரக்கணக்கான சைவப் பெருமக்களின் இதய தெய்வமாகிய திருஞானசம்பந்தப் பெருமானை இழிவு படுத்தும் இக்கூற்று சைவர்களின் உள்ளத்தைப் புண்படுத்தும் கொடுங்கூற்றாகும். திருநாவுக்கரசுப் பெருமானும் சுந்தரர் பெருமானும் தொழுது வணங்கும் பெருமையுடையவரா இக வாழ்வில் ஈடுபாடு கொண்டவர்? பதினோராம் திருமுறையில் ஆறு அற்புதத் தமிழ் மாலைகள் சூட்டி நம்பியாண்டார் நம்பிகளால் வழிபாடு செய்யப்பட்ட சீர்காழிச் செம்மலா தேவதாசிப் பெண்ணுடன் இக வாழ்வு நடத்தினார்கள்? எதைக் கூறினாலும் சைவர்கள் எதிர்மொழி எழுப்ப மாட்டார்கள் என்ற தைரியம் தான் தங்களை இவ்வாறு புனையச் செய்ததோ?

திருவவதார நோக்கம்

    வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க, பூத பரம்பரை பொலிய் சிவபாத இருதயருக்கும், அன்னை பகவதியாருக்கும் அற்புதக் குழந்தையாக அவதாரம் செய்தவர் ஆளுடையப் பிள்ளையார்.

"அவம் பெருக்கும் புல்லறிவின் அமண் முதலாம் பரசமயப்
 பவம் பெருக்கும் புரைநெறிகள் பாழ்பட நல் லூழிதொறும்
 தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்களெல்லாம்
 சிவம் பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார்"

என்று தெய்வச்சேக்கிழார் பெருமான் சுவாமிகளின் அவதாரச் சிறப்பினை அருமையாக எடுத்துரைபார்.  சமணம், புத்தம் முதலான புறப்புறச்சமயங்களை மதுரையில் ஜுர வாதம், அனல் வாதம், புனல் வாதம் முதலியவற்றாலும், போதி மங்கையில் தர்க்க வாதத்தாலும் வென்றருளிய பெருமான் அம்மதங்கள் வெறுத்து ஒதுக்கிய இக வாழ்வின் சுக அநுபவங்களை சைவ எழுச்சிக்காக அவற்றை மக்களிடம் எடுத்துச் சென்றார் என்ற பொய்யான ஆய்வினைச் செய்யத் தாங்கள் எங்ஙனம் துணிவு கொண்டீர்கள்?

பூம்பாவையை மகளாகக் கொண்ட மகான்

    திருமயிலையில் சிவநேசர் என்ற அருட்பெரும் செல்வர் "அரிய நீர்மையில் அருந்தவம் புரிந்து அரனடியாருக்கு உரிய அர்ச்சனை உலப்பில செய்த அந் நலத்தால்" பூமகள் என உதித்த பூம்பாவைப் பிராட்டியை ஆளுடைய பிள்ளையாருக்கே அர்ப்பணம் செய்ய நினைத்தார்.  அரவு தீண்டி மறைந்த அம்மகளாரின் அஸ்தி அடங்கிய குடத்தினைத் திருமயிலைத் திருக்கோவில் முற்றத்தில் ஆளுடைய பிள்ளையார் திருமுன் வைத்தார்.  பூந்தராய் வேந்தர் "மட்டிட்ட புன்னையங்கானல் எனவரும் மெய்த்திருவாக்கெனும் அமுதம்" அருளிச் செய்கிறார்.  குடம் உடைகிறது, பன்னிராண்டுப் பருவத்துடன் வனப்பு மிக்க கன்னியாகிய பூம்பாவை எழுகிறாள்.  உயிரெழுப்பிய உத்தமரை வணங்குகிறாள்.  வணிகர் பிள்ளையாருக்கு அப்பாவையைத் திருமணம் புரிந்தருள் செய்க சென்று வேண்டுகிறார்.  "கற்றைவார் சடையவர் கருணை காண்வர உற்பவித்தலால் உரைதகாது" என்று கூறியருளி எழில்மிக்க பூம்பாவையை ஏற்க மறுக்கிறார் புகலிவேந்தர்.  இத்தகைய இளம் வீரத்துறவியைத் தேவதாசி குலப் பெண்ணுடன் இகவாழ்வு கொண்டார் என்ற கொடூரமான பொய்யினை எப்படிப் பதிவு செய்தீர்கள்?

பிரமபுரக் குழந்தையும் பிரமாவும்

    பிரமா தான் படைத்த அழகுப் படைப்புகளிலிருந்து ஒவ்வொரு திலம் (எள்) எடுத்து அத்திலங்களிலிருந்து ஓர் அழகிய பெண்ணைப் படைத்து அத்திலோத்தமையின் அழகில் மயங்குகிறார். பலயுகம் வயது உடைய பிரமா தனது மகள் என்பதையும் மறந்து காமவெறியுடன் திலோத்தமை பின்னால் ஓடுகிறார்.  ஆனால் புண்ணியப் பதினாறு ஆண்டு பேர் பெறும் புகலிவேந்தரோ பூம்பாவைப் பிராட்டியிடம் கண்ணுதல் கருணை வெள்ளத்தினைக் கண்டார்.  சிவநேசர் அந்த அருமை மகவாகிய பூம்பாவை பிராட்டியைத் திருமணம் செய்து தர முன் வந்த போது அப்பிராட்டியை மகளாகக் கொண்டார் தோணிபுரத்தோன்றல்! "எண்ணிலாண் டெய்தும் வேதாப் படைத்தவளெழிலின் வெள்ளம், நண்ணுநான் முகத்தாற்கண்டானவளினும் நல்லாள் தன்பாற், புண்ணியப் பதினாராண்டு பேர் பெறும் புகலிவேந்தர் கண்ணுதல் கருணை வெள்ளம் ஆயிர முகத்தாற் கண்டார்" என வரும் பெரிய புராணப் பாடலினைக் காண்க.

    இத்தகைய ஒப்புயர்வற்ற சீர்காழிச் செம்மல் மனோன்மணி என்ற தேவதாசிப் பெண்ணுடன் இக வாழ்வு கொண்டார் என்று மிகக் கேவலமாக எங்கள் பரசமயக் கோளரியைக் குற்றம் சாட்ட எப்படித் துணிந்தீர்கள்?

இகவாழ்வினை நெருங்க விடாத ஏந்தல்

    மறையொழுக்கத்தினை வாழ்ந்து காட்டிய திருஞான சம்பந்தப் பெருமானிடம் "கோதில் மறைநெறிச் சடங்கு காட்டவரும் வேள்வி பல புரிவதற்கோர் கன்னிதனை வேட்டருள வேண்டுமென" சீர்காழி மறையோர்கள் விண்ணப்பம் செய்தார்கள்.  "மறைவாழ அந்தணர்தம் வாய்மையொழுக்கம் பெருகும் துறைவாழச் சுற்றத்தார் தமக்கருளி உடன்பட்டார்" ஆளுடைய பிள்ளையார், திருநல்லூர்ப் பெருமணத்து நம்பாண்டார் நம்பி பெறும் திருமகளாரைக் காழிநாடுடைய பிரான் திருமணம் செய்தருள இசைந்தார்.  திருநீலநக்கனார் திருமண வேள்விச் சடங்குகள் இயற்றினார்.  "மந்திரமுறையாய் எரிவலமாக மாதர் தம் திருக்கையைப் பற்றும் தாமரைச் செங்கையாளர் இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்ததே" என திருவுள்ளத்து வருந்துகிறார்.  இப்பெருமைமிக்க வள்ளலா தேவதாசிப் பெண்ணுடன் இக வாழ்வு கொள்பவர்? நன்றாக இருக்கிறது உங்கள் ஆய்வாற்றல்!

    திருக்கல்யாணம் பூர்த்தியான உடன் ஆளுடைய பிள்ளையார் "கல்லூர் பெருமணம் வேண்டா" என்று பாடியருளித் திருநல்லூர்ப் பெருமண அம்மையப்பரைத் தரிசிக்க தம்பதி சமேதராக எண்ணற்ற அடியவர் பெருமக்களுடன் திருக்கோயில் செல்கிறார். கோயிலுட்பட மேலோங்கும் கொள்கையாற் பெருகுஞ்சோதியுள் "காதலாகிக் கசிந்து" எனவரும் நமச்சிவாயத் திருப்பதிகத்தைப் பாடியருளி அடியார் பெருமக்களுடன் கலந்தருளுகிறார் இங்ஙனம் இல்லற வாழ்விலேயே புகாமல் சிவப்பேறு பெற்ற சீர்காழி செம்மலை ஒரு தேவதாசியுடன் இகவாழ்வு கொண்டார் என்று கொச்சைப்படுத்தி எழுதுவது அறிவுடைமையாகுமா?

    "பிள்ளைப்பாதி புராணம் பாதி" என்று புகழப்படுகின்ற திருஞான சம்பந்தப் பெருமானார் அருள் வாழ்வின் வரலாற்றினைப் பெரியபுராண வாயிலாக அறியாமல் வாயில் வந்தபடியெல்லாம் கேவலப்படுத்தி எழுதியுள்ள தங்களின் ஆய்வு எங்கள் உள்ளங்களை மீளொணாத்துயரத்திலும் அதிர்ச்சியிலும் தள்ளியுள்ளது.  இத்தகைய விபரீத ஆய்வினை கிறிஸ்தவ இஸ்லாமிய ஆன்மீகத் தலைவர்களைப் பற்றி தாங்கள் எழுத இயலுமா? சைவ மக்களின் உறக்கம் தங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் தருகிறது போலும்!

 

   

   

"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்"
"வைதிக சைவம் பரக்கவே"

 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெ ல்லாம

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.