உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்

"உயிர் அடையும் உடல்கள்"

- சைவ சரபம் மா.பட்டமுத்து

   


     உயிர்கள் தமது இச்சை, கிரியை, ஞானம் ஆகியவற்றின் நிகழ்ச்சி சிறிதுமின்றி, ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டு இருக்கும் நிலை கேவலாவத்தையாம். பேரருட்கடலாம் பிஞ்ஞகனார் இங்ஙனம் அறியாமையிருளில் ஆழ்ந்து கிடக்கும் உயிர்கள் மாட்டு அருள் பாலித்துத் தனு, கரண, புவன, போகங்களை அவற்றிற்கு நல்கி, இருவினைகளை நுகர்வித்து ஆணவமல நீக்கத்துக்குத் துணைபுரிகிறார். ஆணவ மலம் நீங்கிய வுயிர்களுக்குத் தமது வரம்பிலா இன்பத்தை வழங்குகிறார். இங்ஙனம் உயிர்களுக்குப் பக்குவ நிலை ஏற்படுமாறு அவற்றிற்குச் சிவநாதன் அளிக்கும் சரீரங்களினியல்பையும், வகையினையும் அறிதல் அவசியமாகும்.

    கேவலாத்தையில் நிற்கும் ஆன்மாக்களுக்கு, அசுத்த மாயையில் அனந்த தேவராற் கலக்குண்ட பாகமாகிய காரண சரீரத்தை இறைவன் அளிக்கிறார். ஓரறிவுமின்றி கேவலத்தில் நின்ற ஆன்மா, அச்சரீரத்தால் தனது அறிவிச்சை செயல்கள் பொதுவகையான் விளங்கப் பெற்றவுடன் ஓரானந்தம் எய்துகிறது. எனவே இக்காரண சரீரம் ஆனந்தமயகோசம் எனவும் பெயர் பெறும்.

    பின், அம்மாயையிலிருந்து தோன்றிய காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகியவற்றாலாகிய கஞ்சுக சரீரத்தை ஆன்மா பொருந்துகிறது. இச்சரீரம் விஞ்ஞான மய கோசமாகும். இந் நிலையில் உயிரின் இச்சா, ஞானக்கிரியைகள் சிறப்பு வகையான் விளங்கப் பெறும். அடுத்து, அந்தக்கரணம் முதலியவற்றிற்குக் காரணமாகிய சாத்துவிகம், இராஜஸம், தாமஸம் என்ற முக்குணங்களாகிய குண சரீரத்தை ஆன்மா அடைகிறது. காரண, கஞ்சுக சரீரங்களீடமாக வரும் விடயங்களில் ஆன்மாவின் அறிவிச்சை செயல்கள் இக்குண சரீரமூலமாக வியாபரிக்கும். இக்குண சரீரம் மனோமய கோசம் எனவும் அழைக்கப்படும். மேற் சொன்ன மூன்று சரீரங்களும் பரசரீரம் எனப்படும்.

    பின், சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம், மனம், புத்தி, அகங்காரம் என்னும் எட்டுடன் கூடிய சூக்கும உடலை உயிர் பெறுகிறது. இவ்வுடலைப் பொருந்தி, போக்கு வரவு செய்து, சூக்கும வினைப் பயன்களை ஈட்டி, நுகர்கிறது. பிராணமய கோசம் என்பது இச்சூக்கும உடலுக்குப் பிறிதொரு கோசம் என்பது இச்சூக்கும உடலுக்குப் பிறிதொரு பெயர். பின், தூல சரீரத்தை உயிர் பெற்று, தூல வினைப் பயன்களை ஈட்டி நுகர்கிறது. அன்னமய கோசம் எனவும் இத்தூல சரீரம் அழைக்கப்படுகிறது.

    இத்தகைய காரண, கஞ்சுக, குண, சூக்கும, தூல சரீரங்கள் ஒன்றற்கொன்று தூலமாகும். ஆன்மா இவை ஒவ்வொன்றிலும் அதுவதுவாய் வசித்து, ஏகதேசியாய்ப் போக்கு வரவு செய்யா நிற்கும். ஆன்மா தூல சரீரத்தைத் தேர்ப்பாகன் போலவும், சூக்கும சரீரத்தை மரப்பாவையினை இயக்குபவன் போலவும், குண சரீரத்தைத் தோற்பாவையினை ஆட்டுபவன் போலவும், கஞ்சுக தேகத்தைப் பரகாயப் பிரவேசம் செய்பவன் போலவும், காரண சரீரத்தைப் பல வேடங்கட்டியாடுபவன் போலவும் வேற்றுமையின்றி நின்று செலுத்தி நிற்கும். இவற்றின் விரிவெல்லாம் ஸ்ரீ சிவஞான சித்தியார் (சுபக்கம்) நான்காஞ் சூத்திரத்திற் கண்டுணர்க.

    ஆன்மாச் சார்ந்ததின் வண்ணமாய் நிற்கும். பூத பரிணாமமாகிய வுடம்பினைப் பற்றிய வழிப் பூதான்மா வென நிற்கும். அகத்தேயுள்ள வாக்கு முதலியவற்றைப் பற்றி நிற்கும் காலை அந்தரான்மா என அழைக்கப்படும். சூக்கும, தூல தத்துவங்களைப் பற்றிய வழி தத்துவான்மா என நிற்கும். புருட தத்துவமாய் நின்று, பிரகிருதி குணங்களைப் பற்றி, இன்ப துன்பத்தை நுகரும் காலத்துச் சீவான்மாவாகும். மந்திரங்களைக் கணித்து அவ்வம்மந்திர மயமேயாய் நிற்கும் பெற்றி, மந்திரான்மா என்னும் நிலையை ஆன்மாவுக்கு அளிக்கிறது. இவையெல்லாம் நீங்கிய வழி. சிவபிரான் திருவருளால், சிவோகம் பாவனையில் நிற்கும் ஆன்மாவுக்குப் பரமான்மா என்னும் பெயர் எழுகிறது.    இவ்வாறு, ஆன்மாக்கள் அனைத்தும் மேற் கூறிய ஐந்து சரீரங்களைச் சிவபிரான் திருவருளால் அடைந்து, வினைப் பயன்களை ஈட்டி, நுகர்ந்து இருவினையொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் நிகழப்பெற்று, குருவின் துணையால் ஞான சாதனங்களை மேற்கொண்டு உமாமஹேஸ்வரரின் உயர் பாத மலர்களைச் சார்ந்து உய்யுமென்க.


 

Click this to download the pdf version of this Essay
 

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம

"வைதிக சைவம் பரக்கவே"

                         

 

திருச்சிற்றம்பலம்.


இந்தக் கட்டுரை சமய சாதனம் மலர் 1 இதழ் 8 (1 March 1964) இல் வெளியிடப்ப்டடது.